தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்: இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்தல்

தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பில் பெங்களூரில் உள்ள இந்திய சமூக நிறுவனத்தில் ஜன. 18 முதல் 20-ஆம் தேதி வரை தலித் கிறிஸ்தவ ஓவியர்களுக்கான பயிலரங்கு நடத்தப்பட்டது. இந்த அமைப்பின் பட்டியல் வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் செயலர் அருட்தந்தை தேவ சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கில், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவ ஓவியர்கள் கலந்துகொண்டனர்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஓவியர்கள் யூசே, சரியானா ஆகியோர் பயிலரங்கில் பங்கேற்றவர்களுக்கு ஓவியக் கலை குறித்த பயிற்சி மற்றும் பின்பற்ற வேண்டிய நுட்பங்களை கற்றுத்தந்தனர். இதையடுத்து தலித் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பான ஓவியங்களை ஓவியர்கள் வரைந்தனர்.
இந்த ஓவியங்கள் ஞாயிற்றுக்கிழமை இந்திய சமூக நிறுவன வளாகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டன. இதன் ஒருங்கிணைப்பாளர் பால் ராபின்சன் தலித் கிறிஸ்தவ ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை பார்வையாளர்களுக்கு விளக்கிக் கூறினார். 
அருள்தந்தை தேவசகாய ராஜ் கூறுகையில், இந்திய சமூகம் சாதி ரீதியாக பிளவுப்பட்டு, மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைத்துள்ளது. கண்ணுக்கு புலப்படாத, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத இந்த சாதி, பெரும்பான்மை மக்களிடையே ஒரு அமைப்பை போல செயல்படுகிறது. சாதி படிநிலையில் கீழிருப்பவருக்கு மேலே இருப்பவர்கள் பல நூற்றாண்டுகளாக துன்பம்  இழைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தலித் மக்கள் மீது நாள்தோறும் வன்முறை நடைபெற்று வருகிறது. தலித்துகள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பிறகும், சாதி அவர்களை விடவில்லை.
இந்தியாவில் கிறிஸ்தவ மதத்திலும் சாதி கொடுமைகள் நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன. இத்தகைய கொடுமைகள் குறித்து பொது சமூகத்துக்கு போதிய அளவில் தெரியவில்லை. சாதி ரீதியான கல்லறை, தீண்டாமை, ஏற்றத் தாழ்வு, உரிமை மறுப்பு, வன்முறை ஏவுதல், உயர் பதவிக்கு வரவிடாமல் தடுத்தல் என தலித் கிறிஸ்தவர்கள் ஏராளமான பிரச்னைகளை அனுபவித்து வருகின்றனர். பொருளாதார நிலையில் இந்து தலித்துகளைப் போலவே இருக்கும் இவர்களுக்கு இட ஒதுக்கீடு கூட தரப்படவில்லை. சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் சிறுபான்மையினராக இருக்கும் தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். 
தலித் கிறிஸ்வர்களின் வெளியே சொல்லப்படாத பிரச்னைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் கிறிஸ்தவர்களின் வலியை, வேதனையை வெளியுலகுக்கு சொல்வதற்காகவே இந்த கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com