கிரீஷ் கார்னாட், சிவள்ளி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

பன்முகக் கலைஞர் கிரீஷ் கார்னாட், முன்னாள் அமைச்சர் சி.எஸ்.சிவள்ளி மறைவுக்கு கர்நாடக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பன்முகக் கலைஞர் கிரீஷ் கார்னாட், முன்னாள் அமைச்சர் சி.எஸ்.சிவள்ளி மறைவுக்கு கர்நாடக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்கியதும் முன்னாள் அமைச்சர் சி.எஸ்.சிவள்ளி, முன்னாள் மத்திய அமைச்சர் வி.தனஞ்செய்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.எல்.சிவலிங்கேகெளடா, எஸ்.எஸ்.அரகேரி, தமயந்தி போரேகெளடா, சென்னவீரையா சாந்தையா முத்தின பெண்டிமட்டா, விஜயகுமார் கண்ட்ரே, எச்.கோபால்பண்டாரி,சாரதவ்வா எம்.பட்டண்ணா, என்.பி.நஞ்சப்பா, எம்.சத்தியநாராயணா, சம்பாஜி லட்சுமணா பாட்டீல், பன்முகக் கலைஞர் கிரீஷ்கார்னாட் ஆகியோரின் மறைவுக்கு பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவந்தார். 
இந்த தீர்மானத்தை ஆதரித்து முதல்வர் குமாரசாமி பேசுகையில்,"எனது தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்த சி.எஸ்.சிவள்ளி, மிகவும் நல்லமனிதர், போராட்டம் குணம்படைத்தவர். சமூகப்பணியில் ஆர்வமாகப் பங்கெடுத்தவர். அவரது மறைவு தனிப்பட்டமுறையில் எனக்கு பேரிழப்பாகும். முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செய்குமார், நல்ல அரசியல்வாதி, சிறந்த பேச்சாளராக விளங்கியவர். கன்னட இலக்கியத்துக்கு அளப்பரிய பங்காற்றிய கிரீஷ் கார்னாட், இலக்கியம், நாடகம் உள்ளிட்ட பன்முகக்கலைக்கு பங்காற்றியதற்காக ஞானபீடவிருது பெற்றவர்.அவரது மறைவு இலக்கியத் துறைக்கு பெரும் இழப்பாகும்' என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா பேசுகையில்,"முன்னாள் அமைச்சர் சிவள்ளி, முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செய்குமார் போன்ற நல்ல அரசியல்வாதிகளை இழந்திருக்கிறோம். தனஞ்செய்குமார், மத்திய அமைச்சராக, 4 முறை எம்பியாக பணியாற்றியவர். கிரீஷ்கார்னாட் மறைவு கர்நாடகத்திற்கு பெரும் இழப்பாகும். ஞானபீடவிருது பெற்று கர்நாடகத்திற்கு பெருமைசேர்த்தவர். இவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்'
என்றார்.
முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசுகையில்,"கூட்டணி அரசில் அமைச்சராக இருந்து இறந்தவர் சிவள்ளி. நேர்மை, எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் சிவள்ளி. ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அமைச்சராக உயர்ந்தவர். மக்கள் செல்வாக்கு பெற்றிருந்தவர். வாழ்க்கையில் போராட்டம் நடத்தி உயர்ந்தவர். நேர்மையான அரசியல்வாதிகள் குறைந்துவரும் நிலையில், 3 முறை எம்எல்ஏவாக பதவிவகித்தவர் சிவள்ளி. எதிர்கால அரசியல்வாதிகளுக்கு சிவள்ளியின் வாழ்க்கை சிறந்த முன்னுதாரணமாகும்.
கிரீஷ்கார்னாட், கன்னடமொழிக்கு 7-ஆவது ஞானபீடவிருதுபெற்றிருந்தவர். மதவாதிகளிடம் சமரசம் செய்துகொள்ளாமல், மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டிருந்தவர். பகுத்தறிவுவாழ்க்கையை தனது
வாழ்நாள்முழுவதும் நடத்தியவர்'என்றார்.
இந்த தீர்மானத்தின் மீது துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், ஜி.டி.தேவெ கெளடா, யூ.டி.காதர், முன்னாள் அமைச்சர் பசவராஜ் பொம்மை, அபய்பாட்டீல், ஈஸ்வர்கண்ட்ரே, சங்கர்பாட்டீல், கே.எஸ்.லிங்கேஷ், லட்சுமி ஹெப்பாள்கர், டாக்டர் ரங்கநாத் உள்ளிட்டோர் பேசினர். இதைத் தொடர்ந்து, இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com