பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: எடியூரப்பா, குமாரசாமி சிறப்பு வழிபாடு

கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜூலை 18) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா


கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜூலை 18) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா வேள்வி வளர்த்து சிறப்பு பூஜை செய்தார். இதேபோல முதல்வர் குமாரசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை(ஜூலை 18) நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திட்டமிட்டுள்ளது. 
இந்நிலையில், பெங்களூரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த கவி கங்காதேஸ்வரா கோயிலில் புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, தனது குடும்பத்தினருடன் சிறப்பு வேள்வி வளர்த்து வழிபாடு நடத்தினார்.
சந்திர கிரகணம் செவ்வாய்க்கிழமை நடந்ததை முன்னிட்டு தோஷம் கழிக்கும் வகையில் ஹோமம், ருத்ரயாகம் நடத்தப்பட்டது. இதில் எடியூரப்பா முழுமையாக கலந்துகொண்டு சிறப்புவழிபாடு நடத்தினார். இந்த வேள்வியில் எடியூரப்பாவின் மகள் உமாதேவி, எம்எல்ஏ ரவிசுப்பிரமணியா, முன்னாள் மேயர் கட்டா சத்தியநாராயணா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தோல்வியை தழுவி, பாஜக ஆட்சி மலரும் என்று எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே, பாஜக எம்எல்ஏக்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, விஸ்வேஷ்வர ஹெக்டேகாகேரி உள்ளிட்ட பாஜகவினர் வித்யாரண்யபுரத்தில் உள்ள காலிகாகிரிஜா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். எடியூரப்பா முதல்வராக இந்த பூஜை நடத்தப்பட்டதாக பாஜக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, பெங்களூரு, சாமராஜ்பேட்டில் உள்ள சங்கரமடத்துக்கு புதன்கிழமை சென்ற முதல்வர் குமாரசாமி, அவரது மூத்த சகோதரரும் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா உள்ளிட்ட குடும்பத்தினர் சாரதா அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com