ரூ.603 கோடியில் சந்திரயான்-2 விண்கலம் வடிவமைப்பு

ஜூலை 15 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2 விண்கலம் ரூ.603 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜூலை 15 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2 விண்கலம் ரூ.603 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு வெளியே வானியல்சார் பொருட்களில் ஒன்றான நிலவில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக இந்தியாவால் முதன்முறையாக விண்ணுக்குசெலுத்தப்பட்ட ஆய்வியல் விண்கலம் சந்திரயான்-1. இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின்(இஸ்ரோ)சார்பில் 2008-ஆம் ஆண்டு அக்.22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, நவ.14-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டது சந்திரயான்-1. 
நிலவில் இருந்து 200கிமீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சந்திரயான்-1 விண்கலம் நடத்திய ஆராய்ச்சியின் விளைவாக நிலவில் நீர் இருப்பது கண்டறியப்பட்டது. இது உலக அளவில் மகத்தான சாதனையாக கருதப்பட்டது. இதன் மூலம் நிலவுக்கு ஆராய்ச்சி விண்கலங்களை அனுப்பிய 4-ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்தது. 
இதன் தொடர்ச்சியாக  நிலவின் மீது தரையிறங்கி அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக சந்திரயான்-2 அனுப்பப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய இஸ்ரோ தலைவர் கைலாசவடிவு சிவன், விண்வெளி ஆராய்ச்சி குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பாக விஞ்ஞானி விக்ரம்சாராபாய் பேசியபோது, சாதாரண மக்களின் வாழ்க்கையில் இது என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. எதற்காக விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டனர். ஆனால், அவரது கனவின் பயனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதேபோல, அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியால் விண்வெளி குறித்து மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின் பலன்கள் நமது அடுத்த தலைமுறையினருக்கு உதவலாம் என்றார். 
அரசுப் பள்ளியில் தொடங்கிய பயணம்... 
இஸ்ரோ தலைவராக உள்ள கைலாசவடிவு சிவன், கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலுக்கு அண்மையில் உள்ள வல்லங்குமாரவிளை என்னும் சிற்றூர் ஆகும். 1958-ஆம் ஆண்டு பிறந்த சிவன், சரக்கல்விளை கிராமத்தின் அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பள்ளிக்கல்வியை கற்றவர்.
கணினியில் இளம் அறிவியல் பட்டமும், பின்னர் சென்னையில் உள்ள எம்.ஐ. டி.யில் விமானவியல்(ஏரோநாட்டிகல்) பொறியியலும் படித்தார். பெங்களுரில் இந்தியன் அறிவியல் நிறுவனத்தில்(ஐஐஎஸ்சி)முதுஅறிவியல் பட்டம் பெற்ற இவர், 2006-ஆம் ஆண்டில் மும்பை இந்திய தொழில் நுட்பக்கழகத்தில்(ஐஐடி) விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். 
1982-ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்த சிவன், 2018-ஆம் ஆண்டு ஜன.15-ஆம் தேதி இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார். 
காமராஜர் பிறந்த நாளில்
நிலவுக்குப் பயணம்: தமிழகத்தில் கல்விப்புரட்சியை ஏற்படுத்தி, ஏழை மக்களின் கல்விக்கண் திறந்த தமிழக முதல்வராக இருந்த காமராஜரின் பங்களிப்பை நினைவுக்கூரும் வகையில் அவரது பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி அன்று நிலவு ஆராய்ச்சிக்கு புறப்படும் சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்த முடிவுசெய்துள்ள இஸ்ரோவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

சந்திரயான்-2 பற்றிய சுவையான தகவல்கள்
* நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் சந்திரயான்-2
*நிலவின் மேற்பரப்பை புரிந்துகொள்ள சந்திரயான்-2 ஆராய்ச்சி உதவியாக இருக்கும். இதில் 14 ஆராய்ச்சிக் கருவிகள் இடம்பெறுகின்றன.
*இந்தியாவின் விண்வெளித்தந்தை விக்ரம்சாரபாய் நினைவாக லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
* ரோவரின் ஒருசக்கரத்தில் மூவண்ணக்கொடியில் உள்ள அசோகசக்கரமும், மற்றொரு சக்கரத்தில் இஸ்ரோவின் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும். ஆர்ப்பிட்டர், லேண்டர், ரோவரில் இந்தியக்கொடி இடம்
பெற்றிருக்கும்.

நிலவின் நிஜங்கள்
* ஒத்தியங்கு வட்டப்பாதையில் நிலவு பயணிப்பதால், அதன் ஒருபக்கத்தை மட்டுமே பூமியில் இருந்து காணமுடியும்.
* பூமி நடுக்கத்தால் நிலநடுக்கம் ஏற்படுவதுபோல, பூமியின் புவி ஈர்ப்புவிசையால் நிலவுநடுக்கங்கள் ஏற்படுகிறது. இது நிலவின் மேற்பரப்பை கிழித்து, பிளவுபடுத்தக்கூடியது.
* விண்வெளியின் நீள்வட்ட சாய்வின் காரணமாக நிலவு வட்டமாக இருப்பது போல தோன்றினாலும், அதன் உண்மையான வடிவம் நீள்வட்டம் தான்(முட்டைவடிவம்). 
* மணிக்கு 640 கி.மீ.வேகத்தில் பறக்கும் போயிங் போன்ற விமானங்களில் வளைவுகள் இல்லாமல் நேர்க்கோட்டு பாதையில் பயணித்தால் பூமியில் இருந்து 3,84,400கிமீ தொலைவில் உள்ள நிலவை 25 நாட்களில் அடைய முடியும்.
* பூமியின் அதிகபட்ச வெப்பம் ஈரானின் லட் பாலைவனத்தில் 70.7டிகிசி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பம் அண்டார்டிகாவின் வோஸ்டாக் ஆராய்ச்சி நிலையத்தில் மைனஸ் 89.2டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. ஆனால், நிலவில் ஒரேநாளில் தட்பவெப்பம் அதிகப்பட்சமாக 121 டிகிரிசெல்சியசாகவும், குறைந்தபட்சமாக மைனஸ் 157 டிகிரி செல்சியசாகவும் மாறும் தன்மைக்கொண்டதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com