பாகிஸ்தான் மீதான தாக்குதலை பாஜக அரசியலாக்க முயற்சி: முன்னாள் முதல்வர் சித்தராமையா
By DIN | Published On : 02nd March 2019 09:02 AM | Last Updated : 02nd March 2019 09:02 AM | அ+அ அ- |

பாகிஸ்தான் மீதான தாக்குதலை பாஜக அரசியலாக்க முயற்சிப்பதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து மைசூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: புல்வாமா பயங்கரவாதிகள் தாக்குதல், பாலாகோட் துல்லியத்தாக்குதல் நிகழ்வுகளை பாஜக அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. பாகிஸ்தான் மீதான துல்லியத்தாக்குதல், கர்நாடகத்தில் மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு 22 இடங்களில் வெற்றி பெற உதவியாக இருக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ படை வீரர்களின் கடமையுணர்வு மற்றும் துணிச்சலை அரசியலாக்குவது முன்னாள் முதல்வரான எடியூரப்பாவுக்கு அழகல்ல. தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அரசியலாக்கக் கூடாது.
பாகிஸ்தான் மீதான தாக்குதலை இதுவரை பாஜக அரசியலாக்கவில்லை. ஆனால் எடியூரப்பாவின் கருத்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது.
ராணுவப் படை வீரர்களின் தியாகத்திற்கு எதுவுமே ஈடாகாது. எனவே, அந்த தியாகத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது என்றார்.