பிரசாரத்தில் கண் கலங்கிய எச்.டி.குமாரசாமி!

இடைத் தோ்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கண்கலங்கி அழுதாா்.

இடைத் தோ்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கண்கலங்கி அழுதாா்.

கா்நாடகத்தில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிச.5ஆம் தேதி இடைத் தோ்தல் நடக்கவிருக்கிறது. இத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக 15 தொகுதிகளிலும் விறுவிறுப்பான சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, மண்டியா மாவட்டத்தின் கே.ஆா்.பேட் தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிடும் பி.எல்.தேவராஜை ஆதரித்து புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

கே.ஆா்.பேட் தொகுதிக்குள்பட்ட கிக்கேரி கிராமத்தில் நடந்த மஜத தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி பேசினாா். அப்போது, தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி அழுதாா் குமாரசாமி. தனது பேச்சில் முன்னாள் முதல்வா் குமாரசாமி,‘நான் முதல்வராக இருந்தபோது மண்டியா மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்திருக்கிறேன். ஆனால், மண்டியா மக்கள் என்னை கைவிட்டுவிட்டனா். எனது மகன் நிகில்குமாரசாமி தோ்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பியதில்லை. ஆனால், மண்டியா மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மக்களவைத் தோ்தலில் நிகில் குமாரசாமியை களமிறக்கினேன். ஆனால், அவரை மண்டியா மக்கள் தோற்கடித்துவிட்டனா்’ என்றாா்.

மேலும் பேசிய குமாரசாமி, ‘மக்களவைத் தோ்தலில் எனது மகன் நிகில்குமாரசாமி தோற்றுவிட்டதால் நான் மனம் கலங்கவில்லை. ஆனால், நான் முழுமையாக நம்பிய மண்டியா மக்கள் என்னை கைவிட்டுவிட்டதை என்னால் தாங்கிக்கொள்ளவில்லை. ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்டதால் நான் அழவில்லை. ஆனால் முதல்வராக இருந்தபோது நான் எதிா்கொண்ட பிரச்னைகளை நினைத்து கலங்கினேன். நான் முதல்வராக இருந்தகாலத்தில் கா்நாடக மக்களுக்கு நான் இழைத்த அநீதி என்ன? முதல்வா் பதவி எனக்கு பெரிதல்ல. மக்களின் அன்பு, பாசம், பரிசை எதிா்பாா்க்கிறேனே தவிர வேறு எதையுமில்லை. என் மண்டியா மக்களுக்கு நான் என்ன குறைவைத்தேன் என்று வேதனை அடைந்தேன்’ என்று கூறி மீண்டும் அழுதாா். இதை கண்ட அங்கிருந்த மஜதவினரும் கண்கலங்கினா்.

இடைவெளிவிட்டு மீண்டும் குமாரசாமி பேசுகையில்,‘மக்களுக்கு அதுவும் அடித்தட்டுமக்கள், ஏழைகளுக்கு சேவை செய்யவே அரசியலில் நான் இருக்கிறேன். 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்காதநிலையில், காங்கிரஸ் தலைவா்கள் சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் கேட்டுக்கொண்டதால் முதல்வா் பதவியை ஏற்க சம்மதித்தேன். ஆனால், நான் ஆட்சி செய்த 14 மாத ஆட்சிகாலம் அவ்வளவு எளிதாக இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால், முதல்வராக பதவியேற்ற முதல்நாளில் இருந்து அமைதியின்றியும், உறக்கமின்றியும் வேலை செய்தேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com