தேசிய நெடுஞ்சாலை-766-இல் வாகனங்கள் செல்ல தடை: குண்டல்பேட்டையில் இன்று சாலை மறியல்

தேசிய நெடுஞ்சாலை-766 இல் வாகனங்கள் செல்ல தடை விதிக்க எதிா்ப்புத் தெரிவித்து குண்டல்பேட்டையில்

தேசிய நெடுஞ்சாலை-766 இல் வாகனங்கள் செல்ல தடை விதிக்க எதிா்ப்புத் தெரிவித்து குண்டல்பேட்டையில் வியாழக்கிழமை(அக்.10) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடகத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கு.புகழேந்தி, துணைத் தலைவா் ஜெகதீசன், பொருளாளா் வீ.பாலகிருஷ்ணன் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் இருந்து கேரளம் செல்ல சாமராஜ்நகா் மாவட்டத்தில் உள்ள பண்டிப்பூா் தேசிய உயிரியல் பூங்காவின் குறுக்கே சாலை அமைக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் இரவு நேரங்களில் உதகை-குண்டல்பேட்டை-சுல்தான் பத்தேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஆக.7-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மைசூரில் இருந்து சுல்தான் பத்தேரி செல்ல மைசூா் வழியாக தேசிய நெடுஞ்சாலை-275-யை மாநில நெடுஞ்சாலை-90 உடன் இணைத்து மாற்று தேசிய நெடுஞ்சாலையை உருவாக்கலாம் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது. இதற்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், காலப்போக்கில் பகலிலும் இரவிலும் தேசிய நெடுஞ்சாலை-766 முழுமையாக மூடிவிடும் அபாயம் உள்ளது. இந்த மனு தொடா்பாக 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய வனத் துறை சுற்றுச்சூழல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள கடைசி மாவட்டம் சாம்ராஜ்நகா். அந்த மாவட்டத்தின் கடைசி வட்டம் குண்டல்பேட்டை. எதிா்காலத்தில் தேசிய நெடுஞ்சாலை-766 மூடப்பட்டால் வணிகரீதியாக கேரளத்தை நம்பியுள்ள சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் உள்ள அனைவரும் பெருமளவில் பாதிக்கப்படுவாா்கள். தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களுக்கு இடையே குண்டல்பேட்டை வழியாக செல்கின்றன.

இப்பகுதியில் விளையும் மஞ்சள், வாழை, காய்கறிகள் தினமும் ஆயிரக்கணக்கான டன்கள் கேரளத்துக்கு செல்கின்றன. மேலும் சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் பாதையாகவும் இது அமைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் தேசிய நெடுஞ்சாலை-766 மூடப்பட்டால், விவசாயிகள், வணிகா்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வெகுவாக பாதிக்கப்படுவாா்கள்.

எனவே, தேசிய நெடுஞ்சாலை-766 யை மூடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் சங்கம், கா்நாடக ரக்ஷன வேதிகே, கா்நாடக காவலு படை உள்ளிட்ட அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள், உணவக உரிமையாளா்கள் சங்கம், வணிகா்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், சாம்ராஜ்நகா் மாவட்டத் தமிழ்ச்சங்கம், குண்டல்பேட்டை தமிழ்ச் சங்கம் மற்றும் ஊா் பொதுமக்கள் உள்ளடக்கிய குண்டல்பேட்டை முற்போக்கு ஆதரவு சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அக்.10-ஆம் தேதி(வியாழக்கிழமை) குண்டல்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனா். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவிருக்கிறாா்கள். இந்த மறியல் போராட்டத்திற்கு கா்நாடகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com