நாட்டு மக்களின் ஆதரவும், பிரதமரின் உரையும் மன வலிமையை ஊக்கப்படுத்தியது: இஸ்ரோ தலைவர் கே.சிவன்

நாட்டு மக்களின் ஆதரவும்,  பிரதமரின் உரையும்  மன வலிமையை ஊக்கப்படுத்தியது என்று இந்திய

நாட்டு மக்களின் ஆதரவும்,  பிரதமரின் உரையும்  மன வலிமையை ஊக்கப்படுத்தியது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் பயணம் எதிர்பார்த்தவாறு நிலவின் தரையை தொடுவதற்கு முன்பு அதன் சமிக்ஞைகள் துண்டிக்கப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.
இவர்களை பெங்களூரு, பீன்யாவில் உள்ள இஸ்ரோ தொலை அளப்பியல், கண்காணிப்பு- கட்டளை ஒருங்கமைவு மையத்தில் சனிக்கிழமை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி,  தைரியமூட்டும் வகையில் 25 நிமிடங்கள் பேசினார்.
அப்போது மோடி பேசுகையில், தோல்விகளால் துவண்டுவிடாமல், அடுத்த முயற்சிகளில் ஈடுபடுமாறும், பயணத்தை தங்குதடையில்லாமல் தொடருமாறும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து,  சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் நிலவின் மீது தரை இறங்காததால் சோர்ந்து போயிருந்த விஞ்ஞானிகளுக்கு மோடியின் உரை புதிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்,  மனம் உடைந்து கண்ணீர்விட்டு அழுத சிவனை மோடி ஆரத்தழுவி ஆறுதல் கூறிய காணொளிக்காட்சிக்கு சமூகவலைத்தளங்களில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன், பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில்,"நாட்டுமக்களின் ஆதரவும், பிரதமரின் உரையும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது எங்களது மனவலிமையை ஊக்கப்படுத்தியது." என்றார் அவர்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன்: பிரதமரின் எழுச்சியூட்டும், ஊக்கமூட்டும் உரையும், சிவனையும் இஸ்ரோ விஞ்ஞானிகளையும் உறுதிப்படுத்தியதும், முழுமையான ஆதரவளித்ததும் வெகுவாக பாராட்டுக்குரியது. இதன் மூலம் நாங்கள் நெகிழ்ந்துள்ளோம். நமதுநாட்டுமக்களின் ஆதரவு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பக்கபலமாக இருந்துள்ளது. பிரதமர், நம்பமுடியாத அளவுக்கு நடந்துகொண்டார். பிரதமர் தன்னை வெளீப்படுத்தியவிதம் உணர்ச்சிகரமாகவும், ஒருசில நேரங்களில் ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டதாகவும், நேர்மறையானதாகவும் இருந்தன. இதைவிட நாங்கள் எதையும் எதிர்பார்த்திருக்க முடியாது.  உண்மையில் அற்புதமான அனுபவம்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார்:  நாட்டுமக்களுக்கும், பிரதமருக்கும் என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம். லேண்டரை மெதுவாக தரை இறக்குவதற்கான ஆயிரக்கணக்கான வழிவகைகள் உள்ளன. என்றாலும் அவை அனைத்தும் சிக்கல்கள் நிறைந்தவை. இதை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள நாட்டுமக்கள், இஸ்ரோவிஞ்ஞானிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துள்ளனர். இது ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகும். நாட்டுமக்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com