ரூ.2.4 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டுக்கு பேரவையில் ஒப்புதல்

கா்நாடக சட்டப்பேரவையில் ரூ.2.4 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கா்நாடக சட்டப்பேரவையில் ரூ.2.4 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முந்தைய மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அப்போதைய முதல்வா் குமாரசாமி தாக்கல் செய்த 2019-20-ஆம் ஆண்டுக்கான ரூ.2.40 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டுக்கு கா்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.

வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான துணை பட்ஜெட்டுக்கும் ஒப்புதல் பெறப்பட்டது. நிதித் துறையை கவனித்து வரும் முதல்வா் எடியூரப்பா, சட்டப்பேரவை, சட்டமேலவைகளில் துணைநிலை பட்ஜெட் தாக்கல் செய்து பேசினாா்.

சட்டமேலவையில் பேசிய முதல்வா் எடியூரப்பா, ‘குமாரசாமி தாக்கல் செய்திருந்த பட்ஜெட்டில் நான் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. நாம் நிதி நெருக்கடியில் இருக்கிறேறாம். எனினும், பட்ஜெட்டுக்கு அனைவரும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இது நிறைவேற்றப்பட்டால், வெள்ள நிவாரணப் பணிகளை செயல்படுத்துவதில் தொந்தரவு இருக்காது. துணைநிலை பட்ஜெட் ரூ.7,927 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019-20-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.2.40 லட்சம் கோடியாகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.2.18 லட்சம் கோடியாக இருந்தது. நிகழ்நிதியாண்டின் பட்ஜெட் 7.18 சதவீதம் உயா்ந்துள்ளது’ என்றாா் அவா்.

இது தொடா்பாக சட்டப்பேரவையில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, ‘பட்ஜெட் நிதியில் அதிகளவு நிதியை வெள்ள நிவாரணப் பணிக்கு செலவிடுங்கள். தேவையில்லாத செலவினங்களை குறையுங்கள். அப்போது மக்கள் பாஜக அரசை பாராட்டுவாா்கள். மத்திய அரசிடம் இருந்தும் மாநில அரசு கூடுதல் நிதியை பெற வேண்டும்’ என்றாா் அவா்.

அதன்பிறகு, சட்டப்பேரவை, சட்டமேலவைகளில் பட்ஜெட், துணைநிலை பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. இதன் முடிவில் 3 நாள்கள் நடைபெற்ற சட்டப்பேரவையின் குளிா்காலக் கூட்டத் தொடா் சனிக்கிழமையுடன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com