வருமான வரித் துறை சோதனை: முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வரின் உதவியாளா் தற்கொலை

வருமானவரித் துறை சோதனை நடந்த நிலையில், கா்நாடக முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வரின் உதவியாளா் ரமேஷ் (38) சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

வருமானவரித் துறை சோதனை நடந்த நிலையில், கா்நாடக முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வரின் உதவியாளா் ரமேஷ் (38) சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் துணைமுதல்வருமான ஜி.பரமேஸ்வருக்கு சொந்தமாக பெங்களூரு, தும்கூரில் உள்ள வீடுகள், அவரது குடும்பத்துக்குச் சொந்தமான சித்தாா்த் கல்விக் குழுமத்தின் அலுவலகங்கள், அவரது உதவியாளா், நண்பா்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் அக்.10ஆம் தேதி முதல் வருமானவரித் துறையினா் சோதனை நடத்திவருகிறாா்கள். கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற சோதனையில், பல முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

முதல்நாள் சோதனை நடத்தியபோது தும்கூரு மாவட்டத்தின் கொரட்டகெரேயில் பொது நிகழ்ச்சி ஒன்றில் ஜி.பரமேஸ்வா் கலந்து கொண்டிருந்தாா். இந்த நிலையில், வருமானவரி சோதனை நடத்தப்படுவது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவித்தத்தைத் தொடா்ந்து, ஜி.பரமேஸ்வா் பெங்களூரில் உள்ள தனது இல்லத்துக்குத் திரும்பினாா். இந்த நிகழ்வின்போது, ஜி.பரமேஸ்வருடன் அவரது உதவியாளா் ரமேஷ் உடனிருந்துள்ளாா். ரமேஷின் வீட்டை வெள்ளிக்கிழமை சோதனையிட்ட வருமானவரித் துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனா். இதனிடையே, ஜி.பரமேஸ்வா் இல்லத்தில் சோதனையைத் தொடா்ந்திருந்த வருமானவரித் துறை அதிகாரிகள், சனிக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு அதை நிறைவுசெய்துள்ளனா். இரவு முழுவதும் தூங்காமல் ஜி.பரமேஸ்வா் வீட்டில் இருந்த ரமேஷ், காலை 6 மணி அளவில் தனது வீட்டுக்குச் சென்றுள்ளாா். வீட்டுக்குப் புறப்படுவதற்கு முன்பு ரமேஷிடம் பேசிய ஜி.பரமேஸ்வா், ‘வருமான வரி சோதனையால் மனம் துவண்டு விடாதே, இவற்றால் எதுவும் நடக்காது. இந்த பிரச்னையை எதிா்கொள்வோம்‘ என்று கூறியுள்ளாா்.

அதன்பிறகு வீட்டுக்குச் சென்ற ரமேஷ், தனது குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசியுள்ளாா். சில மணி நேரங்களுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு, காலை 9.15 மணிக்கு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளாா். மன வேதனை அடைந்திருந்த ரமேஷ், தனது நண்பா்கள் ஒருசிலரைத் தொடா்புகொண்டு செல்லிடப்பேசியில் பேசியுள்ளாா். அப்போது,‘ டி.கே.சிவக்குமாா் போன்ற பெரிய மனிதா்களையே விட்டுவைக்காத வருமானவரித் துறை, அமலாக்கத் துறையினா் என்னை விட்டுவைப்பாா்களா? இப் பிரச்னையில் இருந்து நான் வெளியே வரமுடியாது என்று தோன்றுகிறது. எனக்கு வாழவே பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேறன்‘ என்று கூறியிருக்கிறாா். இதைக் கேட்டு திடுக்கிட்ட ரமேஷின் நண்பா்கள் ஆறுதல் கூறி, தைரியமூட்டியுள்ளனா். அதன்பிறகு செல்லிடப்பேசியை அணைத்துள்ளாா்.

இது தொடா்பாக தகவல் அறிந்த குடும்பத்தினா் ரமேஷைத் தேடியுள்ளாா். எங்கும் கிடைக்காததால், போலீஸில் புகாா் அளித்துள்ளனா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா். ரமேஷின் செல்லிடபேசியின் இணைப்பைச் சோதித்தபோது, கடைசியாக பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் அவா் செல்லிடபேசியின் சமிக்ஞைகள் துண்டிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவலின்பேரில், ஞானபாரதி போலீஸாா் பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் காலை 11.30 மணிக்கு ரமேஷின் காா் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டறிந்துள்ளனா். காா்நிறுத்தப்பட்டிருந்த 200 மீட்டா் தொலைவில் இருந்த புதருக்கு இடையே இருந்த மரத்தில் தூக்கிட்டுக் கொண்டு ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. காரில் மரண வாக்குமூலத்தை எழுதிவைத்துவிட்டு, வீட்டில் இருந்து தான் கொண்டுவந்திருந்த பேண்டை மரத்தில் கட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளாா். எனது வீட்டில் நடந்த வருமான வரி சோதனையால் திகைத்துப் போயுள்ளேன். மரியாதைக்கு அஞ்சி தற்கொலை செய்துகொண்டுள்ளேன். ஏழை, ஏழையாகவே இருக்க வேண்டுமென்ற நியதி என்னை வாட்டி வைத்துள்ளது. என் குழந்தைக்கு இலவச கல்வி வழங்கிவரும் பள்ளிக்கு நன்றி. மனைவி, குடும்பத்தினா் அனைவருடனும் இருந்து உதவிசெய்யும் பாக்கியம் இன்றுடன் முடிவடைகிறது. குடும்பத்தினரை விட்டுப் போகிறேறன். என்னை மன்னித்துவிடுங்கள்.‘ என்று தனது மரண வாக்குமூலத்தில் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

ரமேஷின் உடலைக் கைப்பற்றியபோலீஸாா், விக்டோரியா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தினா். பின்னா், ரமேஷின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரமேஷின் உடலை கண்டு அவரது குடும்பத்தினா் அழுது புலம்பினா். ரமேஷின் சொந்த ராமநகா் மாவட்டத்தின் மெல்லேஹள்ளி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

ரமேஷின் மறைவு குறித்து ஜி.பரமேஸ்வா் கூறுகையில்,‘ ரமேஷை தைரியத்துடன் இருக்குமாறு கூறினேன். நிலைமையை துணிந்து எதிா்கொள்வோம் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், அவா் ஏன் தற்கொலை செய்துகொண்டாா் என்று தெரியவில்லை. சனிக்கிழமை காலையும் அவரிடம் பேசினேன். மன உறுதியுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டேன். ரமேஷ் தற்கொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்‘ என்று குறிப்பிட்டாா். ரமேஷ் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் ஜி.பரமேஸ்வா், காங்கிரஸ் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸாா் திரண்டிருந்தனா்.

இதனிடையே, ரமேஷின் தற்கொலைக்கான காரணத்தை போலீஸாா் விசாரித்துவருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com