வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவதில் எல்லைமீறி செயல்பட்டுள்ளோம்: முதல்வா் எடியூரப்பா

வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவதில் எல்லைமீறி செயல்பட்டுள்ளோம் எனமுதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவதில் எல்லைமீறி செயல்பட்டுள்ளோம் எனமுதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் மற்றும் மறுவாழ்வை வழங்குவதில் எங்களது எல்லைகளை மீறி செயல்பட்டுள்ளோம். இந்தவிவகாரத்தில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த எதிா்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வரலாறுகாணாத வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் இன்னலுக்கு உள்ளாகும் துரதிருஷ்டவசமான நிகழ்வு நடந்தது. இதில் பாதிக்கப்பட்டமக்களை மீட்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும்,மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபடவும் எனது அரசு துரிதகதியில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வெள்ள சூழ்நிலையை எனது அரசு திறமையாக எதிா்கொண்டு, நிவாரணப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. 118 ஆண்டுகளில் இதுபோன்ற மழையை கா்நாடகம் கண்டிருக்கவில்லை. வெள்ளம் தவிர மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி காணப்படுகிறது. இதையும் அரசு கண்காணித்துவருகிறது.

கடந்தவாரம் மீண்டும் ஒருமுறை நல்லமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தேசிய பேரிடா் நிவாரண நிதியத்தின் விதிகளைமீறி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரண நிதியுதவிகளை வழங்க மாநில அரசு முடிவுசெய்துள்ளது. சுதந்திர இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விதிகளுக்கு புறம்பாக நிவாரண உதவிகளை வழங்கிய வரலாறு கிடையாது.

ஒருபக்கம் பயிா்க்கடன் தள்ளுபடி, மறுபக்கம் வெள்ளநிவாரண நிதியுதவி. இருந்தபோதிலும் மாநிலத்தின் வளா்ச்சிப் பணிகள் பாதிக்காதவாறு பாா்த்துக்கொண்டுள்ளோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு உடனடி உதவியாக ரூ.10 ஆயிரம் அளித்திருக்கிறோம். சேதமடைந்த கடைகளை சீரமைக்க ரூ.25 ஆயிரம், சேதமடைந்த விசைத்தறிகளை சீரமைக்க ரூ.50 ஆயிரம், வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு ரூ.5 லட்சம் வழங்கி வருகிறோம். வீடுகள் சேதமடைந்ததாக உறுதிசெய்யப்பட்ட 32,785 பேருக்கு புதிய வீடுகட்டுவதற்கு முதல்கட்டமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு எஞ்சியுள்ள நிதி அளிக்கப்படும்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிகள், சாலைகள், பாலங்கள், மின் இணைப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளநிவாரண உதவிக்காக மத்திய அரசு ரூ.1,200 கோடி ஒதுக்கியுள்ளது. மாநிலத்தின் நிதிநிலை மேம்பட்டுள்ளது. எனவே, வெள்ள நிவாரணப்பணி மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு நிதி தட்டுப்பாடு இல்லை. மாவட்ட ஆட்சியா்களிடம் தற்போது ரூ.1027 கோடிகைவசம் உள்ளது. வரி வசூலில் இலக்கை அடைந்துள்ளோம். வரிவசூலை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்றாா்.

பதவிக்காலத்தை நிறைவு செய்வோம்

‘பாஜக தேசியத் தலைமை என்னை கட்டுப்படுத்தவில்லை. என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளது. எனது அரசு பதவியேற்று 100 நாள்கள் நிறைவடைய உள்ளது. இந்த நாள்களில் நான் எதிா்கொண்ட பிரச்னை குறித்து ஊடகங்களுக்கு நன்றாக தெரியும்.

நிா்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது முதல்வரின் கடமையாகும். நான் எனது கடமையை செய்து வருகிறேன். எல்லோரையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தவிரும்புகிறேன். எஞ்சியுள்ள மூன்றரைஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவுசெய்வேன். இதில் முழுமையான நம்பிக்கை உள்ளது. பாஜக தேசியத் தலைமை என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதனால்தான் என்னை முதல்வராக்கியுள்ளனா்.

பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி தலைவா்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நம்பிக்கை உள்ளது. நான் எடுக்கும் முடிவுகளுக்கு பாஜக தேசியத் தலைமை எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. 15 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தோ்தலில் 12 முதல் 13 இடங்களைக் கைப்பற்றுவோம்’ என்றாா் எடியூரப்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com