டி.கே.சிவக்குமார் கைது விவகாரம்: ராமநகரம் மாவட்டத்தில் முழு அடைப்பு

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ராமநகரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ராமநகரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
 காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்ததை கண்டித்து, இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ராமநகரம் மாவட்டத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் விடுத்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ராமநகரம் மாவட்டம் முடங்கியது. அலுவலகங்கள், அங்காடிகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலையில் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை.
 இதனால் ராமநகரம் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியது. கனகபுரா, ராமநகரம், சென்னப்பட்டணா உள்ளிட்ட நகரங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். சாலைகளில் டயர்களை குவித்து அவற்றை கொளுத்தினர். இதனால் வாகன போக்குவரத்து நாள் முழுவதும் பாதிக்கப்பட்டது.
 காங்கிரஸாரின் போராட்டத்தையொட்டி, ராமநகரம் மாவட்டம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ராமநகரம் மாவட்டம் தவிர, சித்ரதுர்கா, மைசூரு, மண்டியா, தும்கூரு மாவட்டங்களில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். மைசூரில் வியாழக்கிழமை நடந்த போராட்டத்துக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமை வகித்தார். இப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸார் கலந்து கொண்டனர்.
 இப் போராட்டத்தை தீவிரமாக்குவது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
 டி.கே.சிவக்குமாரைக் கைது செய்த விவகாரத்தை முன்வைத்து மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவது தொடர்பாக காங்கிரஸ் தீவிரமாக யோசித்து வருகிறது. டி.கே.சிவக்குமார் கைது செய்ததை கண்டித்து மஜதவினரும் தனியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com