போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் சிறைத் தண்டனை: பெங்களூரு காவல் ஆணையர் பாஸ்கர்ராவ்

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பெங்களூரு காவல் ஆணையர் பாஸ்கர்ராவ் தெரிவித்தார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பெங்களூரு காவல் ஆணையர் பாஸ்கர்ராவ் தெரிவித்தார்.
 பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கும் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது ஈவு, இரக்கமின்றி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீஸாருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
 மது அருந்தி வாகனம் ஓட்டுவது, ஒருவழிச் சாலையில் வாகனத்தை செலுத்துவது, விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால், தங்கள் உயிருக்கு மட்டுமின்றி மற்றவர்களின் உயிருக்கும் ஒரு சிலர் ஆபத்தை விளைவிக்கின்றனர். இதுபோன்றவர்களுக்கு அபராதம் மட்டுமின்றி, சிறை தண்டனையை விதிக்கவும் முடிவு செய்துள்ளோம்.
 சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும்போது, பலர் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டு எல்லையை மீறுகின்றனர். அதுபோன்ற நிகழ்வுகளை படம் பிடிக்க போலீஸாருக்கு அதிக அளவில் கேமராக்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். உடல் மீது பொருத்திக் கொள்ளும் கேமராக்கள் தற்போது 280 உள்ளது. இதனை 600 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வாகனங்கள் பள்ளிக்கு வெளியே உள்ள சாலைகளில் நிறுத்துவதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே பள்ளி வாகனங்களை பள்ளி வளாகத்தில் நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
 வாகனங்களை நிறுத்த இடமில்லாத பள்ளிகளை நகரத்தின் வெளியே அமைக்க வலியுறுத்தப்படும். சாலைகளில் பேருந்து, கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலைகளில் நிறுத்தும் இலகுரக, பெரும் வாகனங்களுக்கு வரி வசூல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுத்தப்படும்.
 இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகளால் பலர் உயிரிழப்பத்தால், ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாலைகளில் உள்ள குழிகள் குறித்து மாநகராட்சியின் கவனத்திற்கு போக்குவரத்து போலீஸார் கொண்டு செல்லவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநகரில் 12 சதுக்கங்களைக் கண்டறிந்து, வாகன நெரிசல் அதிக உள்ள நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் மட்டுமின்றி, ஆய்வாளர்களும் அங்கு பணியாற்ற அறிவுறுத்தப்படும்.
 வாடகை கார்கள், ஆட்டோக்கள் பயணிகள் அழைக்கும் இடங்களுக்கு மறுக்காமல் செல்ல வேண்டும். மாநகரப் பேருந்துகள் நிறுத்தங்களில் நிற்க மாநகராட்சி இடவசதி செய்து தரவேண்டும் என்றார். பேட்டியின் போது மாநகரப் போக்குவரத்து இணை ஆணையர் ரவிகாந்த் கெளடா, இணை ஆணையர்கள் ஜெகதீஷ், செளம்யலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com