ஞானத்தின் சிறந்த களஞ்சியம் இந்தியா: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

ஞானத்தின் சிறந்த களஞ்சியமாக இந்தியா உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். 

ஞானத்தின் சிறந்த களஞ்சியமாக இந்தியா உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். 
பெங்களூரு ஜெயநகரில் பிஎச்எஸ் கல்வி மையத்தின் 75-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று அவர் பேசியது:  உலகை மாற்றக் கூடிய மிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி என்பதை நாம் அறிவோம்.  இது மக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.  ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது.  எனவே, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வது முக்கியம்.
நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதிலும், நமது மக்களின் செழிப்பை உறுதி செய்வதிலும் கல்வி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.  பழங்காலத்திலிருந்தே அறிவுக்கான தேடல், சுதந்திரம், செழிப்பு மற்றும் அமைதி நிறைந்த உலகத்தை வடிவமைக்க மனிதகுலம் வழிநடத்தி வருகிறது.
நம் தேசம் ஞானத்தின் ஒரு சிறந்த களஞ்சியமாக உள்ளது.  நம்முடைய பண்டைய குருகுல கல்வி முறை,  அதன் குரு- சிஷ்ய பாரம்பரிய மதிப்பு அடிப்படையிலான முழுமையான கல்வியாகும்.  தனிநபர்களை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி கல்வி.  இது முதன்மை உந்து சக்தியாகும்.  இது மக்கள் வளரவும்,  அவர்களின் இலக்குகளை அடையவும் உதவுகிறது. தனிநபர், சமூகத்தில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர கல்வி உதவுகிறது.  சில நேரங்களில் சரியான பதில்களைக் காட்டிலும் சரியான கேள்விகளைக் கேட்பது மிக முக்கியம். ஒரு மாணவனை ஒரு முழுமையான மனிதனாக மாற்றும் ஒரு கல்வி முறை நமக்குத் தேவை.  21- ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப கல்வி முறையை மறுசீரமைக்க வேண்டும் மற்றும் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். 
இதே நேரத்தில் இந்திய மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை ஒரே நேரத்தில் நிலைநிறுத்த வேண்டும்.  புதிய கல்விக் கொள்கை நமது கலாசாரம், பாரம்பரியத்தைத் தவிர, இந்தியாவின் முழுமையான மற்றும் விரிவான வரலாற்றை இணைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 
கல்வியை மிகவும் சமமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்ற வேண்டிய அவசியமும் உள்ளது.  கொள்கை வகுப்பாளர்களும், கல்வியாளர்களும் ஒவ்வொரு குழந்தைக்கும் முழுமையான கல்வியைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.  ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் புதிய கல்விக் கொள்கையின் வரைவு குறித்து ஆய்வு செய்து,  அதை மாற்ற ஆலோசனைகளை வழங்குமாறு அறிவுறுத்துகிறேன்.
இந்தியா புதுமை மற்றும் அறிவின் மையமாக மாற வேண்டும்.  அதற்காக உயர் கல்வி நிறுவனங்களையும்,  பல்கலைக்கழகங்களையும் சர்வதேச தரத்துடன் சிறப்பான மையங்களாக மாற்ற வேண்டும்.  தரமான கல்வியை அமல்படுத்துவதற்கும்,  தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் மத்திய,  மாநில அரசுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கைக்கோத்து செயல்பட வேண்டும்.
கல்வி என்பது அடிப்படை தேவை என்பதால்,  அது மலிவு விலையில் கிடைக்க வேண்டும்.   மலிவு விலையிலான கல்வியை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்பு நிதியை உருவாக்க பெரும் நிறுவனங்கள், தொழில்முனைவோர், அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் முன்வர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில்,  மக்களவை உறுப்பினர்கள்  பி.சி.மோகன்,  தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com