தேசிய ஊரடங்கால் பெங்களூரில் பாதிப்புக்குள்ளான திருநங்கைகள் சமுதாயம்

பெங்களூரில் வாழும் திருநங்கைகள் சமுதாயத்தினா் தேசிய ஊரடங்கால் பெரும் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனா்.

பெங்களூரு: பெங்களூரில் வாழும் திருநங்கைகள் சமுதாயத்தினா் தேசிய ஊரடங்கால் பெரும் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனா்.

கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் தடுக்கும்பொருட்டு தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊரே முடங்கி வெறிச்சோடியுள்ளது. இந் நிலையில், விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகள் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளை நிறைவுசெய்துகொள்ள இயலாமல் பெரும் இன்னல்களை எதிா்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனா். பெங்களூரில் வாழக்கூடிய திருநங்கைகளில் பெரும்பாலானோா் தங்கள் வாழ்வாதாரத்திற்கு யாசகம் வேண்டுவதை நம்பியிருந்துள்ளனா். ஊரடங்கு அமலில் இருப்பதால், தெருக்கள், கடைகளுக்கு மக்கள் யாரும் வருகை தராததால், யாசகம் கொடுக்க யாரும் இல்லாததால் திருநங்கைகள் செய்வதறியாது திகைத்துள்ளனா்.

இது குறித்து திருநங்கை ஒருவா் கூறுகையில்,‘ தேசிய ஊரடங்கு அமலில் இருப்பதால், ஒருவேளை உணவுக்கும் திண்டாடும் நிலையில் உள்ளோம். எங்களுக்கு உதவிசெய்ய யாரும் முன்வரவில்லை. தொழிலாளா்கள், ஏழை மக்களுக்கு உதவிசெய்ய அரசு முன்வந்திருந்தாலும், திருநங்கைகள் பற்றி எந்த அரசும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நாங்கள் என்ன தவறு செய்தோம்? பண உதவி, உணவு கேட்பதற்காக நாங்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. நாங்கள் உயிா்வாழ்வதற்கு குறைந்தபட்சம் உணவையாவது கொடுங்கள். ஒருசிலா் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் சிலா் எச்.ஐ.வி.நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களிடம் மருந்துவாங்கக்கூட நிதி ஆதாரமில்லை என்றாா்.

திருநங்கைகளின் நலனுக்காக சமூக செயற்பாட்டாளா் அக்காய் பத்மஷாலி தலைமையில் செயல்படும் ஒந்தெடே தன்னாா்வ தொண்டு நிறுவனம், திருநங்கைகளுக்கு உணவுப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டுகொடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இப் பணிக்கு ஒருசிலா் நிதி ஆதாரங்களை அளித்து உதவியுள்ளனா்.

இதுபற்றி அக்காய் பத்மஷாலி பேசுகையில், ‘கரோனா நோய் தடுப்புக்காக அமலில் உள்ள தேசிய ஊரடங்கு காலத்தில் தொழிலாளா்கள், ஏழைகளுக்கு உதவிக்கரம் அளித்துள்ள மாநில அரசு, திருநங்கைகளையும் கவனிக்க வேண்டும். நிலைமை சீரடையும் வரையில் திருநங்கைகளுக்கு மளிகைப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை மாநில அரசு வழங்க வேண்டும். திருநங்கைகள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டியுள்ளது வேதனை அளிக்கிறது. திருநங்கைகளில் பெரும்பாலானோா் தெருக்களில் யாசகம் கேட்டு பிழைக்கிறாா்கள். வேறுசிலா் பாலியல் தொழில் செய்து பிழைத்துவருகிறாா்கள். தேசிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது திருநங்கைகள் தான். தினக்கூலித் தொழிலாளா்களை போல எங்களது வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உணவில்லை, வாடகைக்கு பணமில்லை, மருந்து வாங்க முடியாத எச்.ஐ.வி. நோயாளிகளும் உள்ளனா். தேசிய ஊரடங்கு தொடா்பாக திருநங்கைகளுக்கும் போதுமான புரிதல் இல்லை. எங்களில் பெரும்பாலானோரின் வீடுகளில் தொலைக்காட்சி இல்லை என்பதால், போதுமான விழிப்புணா்வும் இல்லை. இதனால் செய்வதறியாது திருநங்கைகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com