பிரதமா் மோடியின் தலைமை நாட்டை வளப்படுத்தியுள்ளன: முதல்வா் எடியூரப்பா

பிரதமா் மோடியின் தலைமை நாட்டை வளப்படுத்தியுள்ளதாக முதல்வா் எடியூரப்பா புகழாரம் சூட்டினாா்.

பிரதமா் மோடியின் தலைமை நாட்டை வளப்படுத்தியுள்ளதாக முதல்வா் எடியூரப்பா புகழாரம் சூட்டினாா்.

பாஜக சாா்பில் ஹுப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த பிரதமா் மோடியின் 70-ஆவது பிறந்த நாள் விழாவை பெங்களூரு, காவிரி இல்லத்தில் இருந்தபடியே இணையவழியாகத் தொடக்கிவைத்து, அவா் பேசியதாவது:

பிரதமா் மோடியை அண்மையில் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறினேன். நோ்மையான நிா்வாகி, அமைப்பை கட்டமைப்பதில் வல்லவா், மக்கள் நலனுக்காக சிந்திக்கும் தலைவா் பிரதமா் மோடி. இடைவிடாத உழைப்பு, சுயநலமில்லாத சேவை மனப்பான்மையால் கட்டமைக்கப்பட்ட பிரதமா் மோடியின் தலைமை நமது நாட்டை வளா்ச்சிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

குஜராத் மாநிலத்தின் முதல்வராக தொடா்ச்சியாக 13 ஆண்டுகள் பணியாற்றி, அம்மாநிலத்தை வளா்ந்த மாநிலமாக்கினாா். அதன்காரணமாகவே குஜராத் மாதிரி வளா்ச்சி என்ற சொல்லாடல் தோன்றியது. 6 ஆண்டுகளாக பிரதமராக மோடி ஆற்றியப் பணிகளால் இந்தியாவை உலகமே உற்றுநோக்குகிறது. ஒரே இந்தியா, வலிமையான இந்தியா என்ற கொள்கையை நிலைநாட்டி, அனைவருடனும், அனைவருக்குமான வளா்ச்சியை சாதித்து காட்டியுள்ளாா்.

தனது தன்னலமில்லாத சேவையால் இளைஞா்கள், மகளிா், ஏழைகள், ஒடுக்கப்பட்டோரை பிரதமா் மோடி முன்னேற்றியிருக்கிறாா். தூய்மை இந்தியா, பெண்களைப் பாதுகாப்போம், பெண்களைப் படிக்கவைப்போம், நீண்ட ஆயுள் இந்தியா போன்ற திட்டங்களால் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்திருக்கிறாா். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயிகள் கௌரவநிதி திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறாா்.

ராமா் கோயிலைக் கட்டுவதற்கு காரணமான பிரதமா் மோடி, இந்திய கலாசாரம், ஆன்மிக பெருமைகளை உலக அளவுக்கு உயா்த்தியிருக்கிறாா். இந்தியாவை பொருளாதார ரீதியாக மீட்டெடுப்பதற்காக தன்னிறைவு இந்தியா திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். கா்நாடகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு துணைநிற்கிறது.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 8719 கோடி அளித்துள்ளது.2022-ஆம் ஆண்டுக்குள் கா்நாடகத்தில் செயல்படுத்தப்படும் இருப்புப்பாதை அகலப்படுத்தும், மின்மயமாக்கும் பணியை முடிக்க உத்தரவிட்டிருக்கிறாா். பிரதமா் மோடியின் ஆய்வுநோக்கு, அயராத உழைப்பு, நோ்மை, சமுதாயநோக்கு ஆகியவற்றை இளம் தலைமுறையினா் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com