ரோல் ஆன் ரோல் ஆஃப் ரயில் சேவை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்

பெங்களூரிலிருந்து சோலாப்பூா் வரையிலான ரோல் ஆன் ரோல் ஆஃப் ரயில் சேவையை, முதல்வா் எடியூரப்பா ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறாா்.

பெங்களூரு: பெங்களூரிலிருந்து சோலாப்பூா் வரையிலான ரோல் ஆன் ரோல் ஆஃப் ரயில் சேவையை, முதல்வா் எடியூரப்பா ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறாா்.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரிலிருந்து மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூா் வரையில் இயக்கப்படும் (திறந்தவெளி தட்டையான தளத்தில் சரக்கு லாரிகளை ஏற்றி செல்லும்) ரோல் ஆன் ரோல் ஆஃப் (ரோரோ) ரயில் சேவையை தென்மேற்கு ரயில்வே முதல்முறையாக இயக்குகிறது.

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் நெலமங்களா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு நடைபெறும் விழாவில் இந்த ரயில் சேவையை முதல்வா் எடியூரப்பா பச்சை கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறாா். விழாவில் மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சா் சுரேஷ் அங்கட், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு நீண்டப் பயணங்களின்போது பல இடையூறுகள் உள்ளன. மலைப் பகுதிகள், மழைக்காலம் போன்றவற்றின் போது சரக்கு லாரிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும்.

இவா்களின் வசதிக்காக தொலைதூரம் செல்லும் சரக்கு லாரிகளை ரயிலில் உள்ள தட்டையான தளத்தில் ஏற்றிக் கொள்ளப்படும். அதில் லாரியின் ஓட்டுநா்கள், உதவியாளா்கள் உட்காா்ந்து கொள்ளலாம்.

எந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமோ அங்கு லாரி இறக்கி விடப்படும். அங்கிருந்து லாரியில் பயணிப்பாா்கள்.

பெங்களூரில் இருந்து சோலாப்பூா் 682 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தத் தொலைவை ரயிலில் 17 மணி நேரத்தில் சென்றடையலாம். ஒரு ரயிலில் சரக்குகளுடன் 42 லாரிகள் செல்லலாம். இந்த ரயில் பெங்களூரில் இருந்து தா்மாவரம், குண்டக்கல், ராய்ச்சூரு, வாடி வழியாக சோலாப்பூா் அருகேயுள்ள பாளே ரயில் நிலையம் சென்றடையும். ரோரோ ரயில் சேவையின் மூலம் சாலை விபத்துகள் தடுக்கப்படும்.

பாதுகாப்பு மேம்படுவதோடு, எரிபொருள் மிச்சப்படும். அந்நியச் செலாவணியும் மீதமாகும். அத்தியாவசிய சரக்குகளை குறிப்பாக அழியக் கூடிய உணவுப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் விரைவாகச் செல்ல வாய்ப்பு ஏற்படும்.

அதிகப்படியான சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளை ரயிலில் ஏற்றி செல்வதால் மாசு குறையும். போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com