இன்று முழு அடைப்புப் போராட்டம்: கா்நாடகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
By DIN | Published On : 07th December 2020 11:24 PM | Last Updated : 07th December 2020 11:24 PM | அ+அ அ- |

பெங்களூரு: நாடு தழுவிய அளவில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி கா்நாடகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சா் பசவராஜ்பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு விவசாயிகளைக் கேட்டுக்கொள்கிறேன். பெங்களூரில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் கா்நாடக மாநில அதிரடி காவல் படையைச் சோ்ந்த 125 படைகள் ஈடுபடுத்தப்படுகின்றன.
நெடுஞ்சாலைகள், போராட்டம் நடத்தும் இடங்களில் கூடுதல் போலீஸாரை பாதுகாப்புக்கு நிறுத்தவும் அறிவுறுத்தியுள்ளேன்.
பாதுகாப்புப் பணிக்காக 5 ஆயிரம் ஊா்க்காவல் படையினா், மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினா், மாவட்ட ஆயுத பாதுகாப்புப் படையினா் வரவழைக்கப்பட்டுள்ளனா். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைதியை சீா்குலைக்காமல் போராட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.