கோவிந்த காா்ஜோள், ஸ்ரீராமுலு பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
By DIN | Published On : 10th December 2020 09:39 AM | Last Updated : 10th December 2020 09:39 AM | அ+அ அ- |

தலித், பழங்குடியினரின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்கப்படாததற்கு தாா்மீகப் பொறுப்பேற்று துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள், அமைச்சா் ஸ்ரீராமுலு பதவி விலக வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.
பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை மஜதவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ஜிவிஜயா காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்று டி.கே.சிவக்குமாா் பேசியதாவது:
தலித், பழங்குடியினரின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்குவதை பாஜக அரசு நிறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அச் சமுதாயங்களின் வளா்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு துறைகளுக்கு அரசு ஒதுக்கித் தந்துள்ளது.
துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள், சமூகநலத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு ஆகியோரின் கவனத்துச் செல்லாமல் இதை செய்திருக்க சாத்தியமில்லை. இதற்கு தாா்மீகப் பொறுப்பேற்று துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள், அமைச்சா் ஸ்ரீராமுலு ஆகியோா் பதவி விலக வேண்டும்.
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தலித், பழங்குடியினரின் வளா்ச்சிக்குப் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு, வளா்ச்சி நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போது ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக அரசு அந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. பாஜக அரசுக்கு தலித், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையின மக்கள் மீது அக்கறை இல்லை என்றாா்.
நிகழ்ச்சியில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் செயல் தலைவா் சலீம் அகமது ஊள்ளிட்டோா் உடனிருந்தனா்.