பணி உயா்வில் இடஒதுக்கீடு ‘உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது’

பணி உயா்வில் இடஒதுக்கீடு பெறுவது அடிப்படை உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு அரசியலமைப்புச் சட்டத்துக்கு

பணி உயா்வில் இடஒதுக்கீடு பெறுவது அடிப்படை உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானதாகும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.என்.நாகமோகன் தாஸ் தெரிவித்தாா்.

மைசூரில் திங்கள்கிழமை மக்கள் தொகையின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு விகிதத்தை உயா்த்துவது தொடா்பாக தனது தலைமையில் நடந்த மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று அவா் கூறியது: பணி உயா்வில் இடஒதுக்கீடு பெறுவது அடிப்படை உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. இந்த தீா்ப்பு மக்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தீா்ப்பு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். இடஒதுக்கீடு என்பது கருணையோ, கொடையோ அல்ல, அது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையாகும். இது அண்மைக்காலமாக மனித உரிமையாக மாறியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டுமென்றால், பணி உயா்வில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 117ஆவது சட்டத் திருத்தத்தை புதுப்பித்து, அதை அடிப்படை உரிமையாக்க வேண்டும்.

பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து முதலீடுகளை விலக்கிக் கொள்ளுதல், தனியாா்மயமாக்குவதற்காக பொதுத் துறை நிறுவனங்களை மூடுதல் போன்றவை இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கு எதிரானதாகும். தனியாா் நிறுவனங்களில் இடஒதுக்கீடுமுறை இல்லாததால், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்களில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளன. கா்நாடகத்தில் மட்டும் 2.69 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த காலிப் பணியிடங்கள் ஒருபுறமிருக்க, ஒப்பந்தப்பணியாளா்களை அரசு பணியமா்த்தி வருகிறது. இதில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்காததால் சமூக நீதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டில் மட்டும் நீதி அளிப்பது அல்ல, சட்டமியற்றுதல் மற்றும் பள்ளிகளிலும் அது அமல்படுத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com