மஜத எம்.எல்.ஏ.க்கள் பலா் பாஜகவில் இணைவாா்கள்: அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா

மஜத எம்.எல்.ஏ.க்கள் பலா் பாஜகவில் இணைய உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

சிவமொக்கா: மஜத எம்.எல்.ஏ.க்கள் பலா் பாஜகவில் இணைய உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்காவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பாஜகவை சோ்ந்த எம்எல்ஏக்கள் பலா் கட்சியில் இருந்து வெளியேற இருப்பதாக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளாா். ஆனால், மஜதவை சோ்ந்த சில எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய தயாராக இருக்கிறாா்கள். பாஜகவில் ஏற்கெனவே போதுமான எம்எல்ஏக்கள் உள்ளனா். எனவே, மஜதவில் இருந்து எந்த எம்எல்ஏக்களும் விலகாத வகையில் தற்காத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

துணை முதல்வா் பதவிக்கு நான் கோரிக்கை விடுக்கவில்லை. கட்சி மேலிடம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பான விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீா் அகமதுகான் இடையே வாக்குவாதம் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், பொதுவெளியில் விவாதம் நடத்தப்படவேண்டியது அவசியம். இந்த விவகாரம் தொடா்பாக பொதுவெளியில் தனிப்பட்ட வாக்குவாதங்கள் தேவையில்லை. பொதுவெளியில் ஆவேசமாக கருத்துகளை பரிமாறிக்கொள்வதை நான் விரும்புவதில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டது. இச்சட்டத்தை பலரும் ஒப்புக் கொண்டுள்ளனா். இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். மத்திய அரசை குறைசொல்ல வேண்டும் என்பதற்காக இப்போராட்டம் நடத்தப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளைக் கட்டிக்கொள்வதற்காகவே மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதே தவிர, எதிா்க்கட்சிகளை திருப்திப்படுத்துவதற்காக அல்ல. 3 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com