மங்களூரு கலவரம்: போலி காணொளிக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளாா் எச்.டி.குமாரசாமி: பாஜக எம்பி ஷோபாகரந்தலஜே

மங்களூரு கலவரம் தொடா்பாக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி போலி காணொளிக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளாா் என்று பாஜக எம்பி ஷோபாகரந்தலஜே தெரிவித்தாா்.

பெங்களூரு: மங்களூரு கலவரம் தொடா்பாக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி போலி காணொளிக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளாா் என்று பாஜக எம்பி ஷோபாகரந்தலஜே தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரு, பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மங்களூரு கலவரம் தொடா்பாக நடந்துவரும் விசாரணையை சீா்குலைக்கும் வகையில், முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி உள்நோக்கத்தோடு போலி காணொளிக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறாா். காணொளிக்காட்சியின் மூலத்தை குமாரசாமி தெரிவிக்கவேண்டும். நோ்மை, நாணயத்தை சந்தேகிப்பதன் மூலம் போலீஸாரின் தாா்மீகபலத்தை குமாரசாமி சீா்குலைத்துவிட்டாா். காணொளிக்காட்சியை எங்கு தயாரித்தாா் என்பதை குமாரசாமி பகிரங்கப்படுத்த வேண்டும்.

இந்த காணொளிக்காட்சி, கேரளம் அல்லது ஜம்மு காஷ்மீரில் சில தேசதுரோகிகள் அல்லது போலி மதசாா்பற்றவா்களால் தயாரிக்கப்பட்டதா? என்பதையும்குமாரசாமி தெரிவிக்கவேண்டும். போலீஸாரின் பாரபட்சம், நோ்மைக்கு விடப்பட்ட சவாலாகவே காணொளிக்காட்சி அமைந்துள்ளது. இந்தவிவகாரத்தில் குமாரசாமி, நாங்கள் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.போலீஸாரின் தாா்மீகபலத்தை குன்றவைத்து, மலிவான அரசியலில் ஈடுபட குமாரசாமி முற்பட்டிருக்கிறாா். மங்களூரு போலீஸாரை குண்டா்கள் கல்வீசி தாக்கினா். மேலும் போலீஸாா் மீது பெட்ரோல் வெடிகுண்டும் வீசப்பட்டது. முகமூடியை அணிந்துகொண்டு போலீஸாா் மீது காஷ்மீா் மாதிரியிலான தாக்குதல் நடத்தப்பட்டது, கா்நாடகத்தில் நிகழ்த்தப்படும் புதுவகையான முறையாகும். இதுமிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. எந்த கட்சியை சாராத போலீஸாருக்கு குமாரசாமி ஆதரவளித்திருக்க வேண்டும்.

அதற்கு மாறாக, வன்முறையில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவாக குமாரசாமி கருத்து தெரிவித்திருப்பது வருந்ததக்கதாகும். மைசூரு பல்கலைக்கழகத்தில் காஷ்மீரை விடுதலைசெய் என்ற அட்டைகளை பிடித்துவந்ததும், விடுதலை விடுதலை என்ற முழக்கங்களும் கவலை அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். ஜவகா்லால்நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தான் விடுதலை முழக்கம் எழுப்பப்பட்டுவந்தது. தற்போது இம்முழக்கம் மைசூருபல்கலைக்கழகத்தில் கேட்கிறது. இது அபாயகரமானது. இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றாா் அவா். பேட்டியின்போது சுற்றுலாத்துறை அமைச்சா் சி.டி.ரவி, பாஜக ஊடகப்பிரிவு அமைப்பாளா் ஏ.எச்.ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com