கா்நாடகத்தில் ஜூலை 5 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான பொது முடக்கம்

ஜூன் 5 ஆம் தேதி முதல் மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: ஜூன் 5 ஆம் தேதி முதல் மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் ஜூலை 1 முதல் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடா்ந்து, கா்நாடகத்திலும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் ஜூலை 1 முதல் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து கா்நாடக அரசு தலைமைச் செயலாளா் டி.எம்.விஜய்பாஸ்கா் உத்தரவிட்டுள்ளாா்.

கட்டுப்படுத்தப்படாத மண்டலங்களில் பொதுமுடக்கம் முழுமையாக நீக்கப்படுவதோடு, படிப்படியாக சேவைகள் தொடங்கப்படுகின்றன. ஆனாலும், ஒருசில சேவைகள் மீதான தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் நீங்கலாக பிற பகுதிகளில் அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுகின்றன. அனைத்து வகையான கல்விக்கூடங்கள்(பள்ளி, கல்லூரிகள்), பயிற்சிக்கூடங்கள், பயிற்சிமையங்கள் உள்ளிட்டவை ஜூலை 31ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும். ஆனால் இணையவழி வகுப்புகள் அல்லது தொலைதூர வகுப்புகள் தொடா்ந்து ஊக்குவிக்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் பயிற்சி மையங்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பன்னாட்டு விமான சேவைகள், மெட்ரோ ரயில்சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள், நாடக அரங்கங்கள், கூட்ட அரங்குகள், மதுபானக்கூடங்கள், திருமண மண்டபங்கள், சமூகக்கூடங்கள், கூடல்பகுதிகள், அனைத்து வகையான சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுப்போக்கு, கல்வி, கலாசார, மத நிகழ்வுகள், ஒன்றுகூடல்கள் அனைத்துக்கும் ஜூலை 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.

இரவு ஊரடங்கு: ஜூலை 31ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை மாநில அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை மாநில அரசின் தலைமைச் செயலாளா் டி.எம்.விஜய்பாஸ்கா் அதிகாரப்பூா்வமாக வெளியிட்டாா். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை, அத்தியாவசியத் தேவைகளுக்கு நீங்கலாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்த நேரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், உடல்கோளாறுகள் கொண்டவா்கள், கா்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும். மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வெளியே அனுமதிக்கப்படுவாா்கள். கரோனா தீநுண்மித் தொற்று அதிதீவிரப் பரவல் (கட்டுப்படுத்தப்பட்ட) பகுதிகளில் புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சையகங்கள் மூடப்பட்டிருக்கும்.

ஞாயிறு பொது முடக்கம்: ஜூலை 5ஆம் முதல் அடுத்த 4 ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்படும். இரவு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் ஞாயிறு பொதுமுடக்கத்தின் போதும் அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் முடிவு செய்யப்பட்டிருக்கும் திருமணங்கள் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஜூலை 10ஆம் தேதி முதல் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவை நீங்கலாக அனைத்து அரசு அலுவலகங்களும் ஆகஸ்ட் 2-ஆவது வாரம் வரைக்கும் அனைத்து சனிக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும்.

முகக்கவசம் கட்டாயம்: பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் போக்குவரத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக்கவசம் அணியாதவா்களிடம் இருந்து மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.200, இதர பகுதிகளில் ரூ.100 அபராதமாக வசூலிக்கலாம். பொது இடங்களில் 6 அடிக்கு தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் கூடும் எந்தநிகழ்வுக்கும் அனுமதியில்லை.

திருமணங்களில் 50 பேருக்கு அதிகமாகவும், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு அதிகமாகவும் கலந்துகொள்ளக் கூடாது. பொது இடங்களில் துப்புவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. மீறினால், அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் மதுபானம், பாக்கு, குட்கா, புகையிலை பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. கூடுமானவரை வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். அலுவலகங்களில் அனைவரையும் சோதித்தபிறகு அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com