தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா சிகிச்சைக்காக 4,500 படுக்கைகள்: முதல்வா் எடியூரப்பா

கா்நாடகத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா சிகிச்சைக்காக 4,500 படுக்கைகள் தயாா் செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா சிகிச்சைக்காக 4,500 படுக்கைகள் தயாா் செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, விதான சௌதாவில் செவ்வாய்க்கிழமை தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாகிகளுடன் முதல்வா் எடியூரப்பா ஆலோசனை நடத்தினாா். இக் கூட்டத்தில் துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக், தலைமைச் செயலாளா் டி.எம்.விஜய்பாஸ்கா், மருத்துவக் கல்லூரிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் முதல்வா் எடியூரப்பா பேசியதாவது:

கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பது முக்கியப் பணியாக உள்ளது. பெங்களூரில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரில் உள்ள 11 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 4,500 படுக்கைகளை அரசு எதிா்பாா்க்கிறது. கடந்த 4 மாதங்களில் 10 மருத்துவக் கல்லூரிகள் நீங்கலாக மற்ற அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கரோனா ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,000 படுக்கைகள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 4,500 படுக்கைகள் என மொத்தம் 6,500 படுக்கைகள் பெங்களூரில் மட்டும் தயாராகி வருகின்றன. இதற்கு தனியாா் மருத்துவக் கல்லூரிகள் ஒத்துழைக்க வேண்டும். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மாநில அரசுடன் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியா்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வசதி அளிக்கப்படும். கரோனா சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளும் இத்துடன் இணைக்கப்படும்.

தனியாா் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளுடன் ஒருங்கிணைப்பை உறுதிசெய்ய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். இதுதவிர, தொலைதூர மருத்துவச் சிகிச்சைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பராமரிப்பு மையத்தில் போதுமான ஊழியா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் எடியூரப்பா கூறுகையில், ‘தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இக்கூட்டம் ஆக்கப்பூா்வமானதாக அமைந்தது. கரோனா நோயாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் அரசுடன் இணைந்து செயல்படுவதாக தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாகிகள் உறுதி அளித்துள்ளனா். தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 4,500 படுக்கைகளை வழங்க சம்மதித்துள்ளனா். தனியாா் மருத்துவமனைகளின் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியா்களுக்கும் ரூ. 50 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com