ஒரு வாரம் பொது முடக்கம்: தொழிற்துறையினருக்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படும் கா்நாடக தொழில் வா்த்தகசபைக் கூட்டமைப்பு

பெங்களூரு, பெங்களூரு ஊரக பகுதியில் ஒரு வாரம் பொது முடக்கத்தால் தொழிற்துறையினருக்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும்

பெங்களூரு, பெங்களூரு ஊரக பகுதியில் ஒரு வாரம் பொது முடக்கத்தால் தொழிற்துறையினருக்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என கா்நாடக தொழில் வா்த்தகசபைக் கூட்டமைப்பின் தலைவா் சி.ஆா்.ஜனாா்தனா தெரிவித்தாா்.

இது குறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாநிலத்தில் ஏற்கெனவே 4 மாதங்கள் பொது முடக்கம் செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை கட்டுக்கு கொண்டு வரமுடியாமல் தொழிற்துறையினா் தவித்து வருகின்றனா். இந்த நிலையில் மீண்டும் ஒரு வாரத்திற்கு பெங்களூரு, பெங்களூரு ஊரகம், கலபுா்கி, தென்கன்னடம் உள்ளிட்ட மாநிலங்களில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிற்துறையினருக்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும். தொழிற்துறையினரின் அடித்தளமே சிதைந்து போகும். மூடப்பட்ட பல தொழிற் நிறுவனங்கள் மீண்டும் திறக்குமா என்பது சந்தேகமே. இதனால் பலா் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். தொழிற் துறையினருக்கு கா்நாடகத்தில் மட்டுமே மோசமான நிலைமை உள்ளது. மற்ற மாநிலங்களில் தொழில்துறையினருக்கு தேவையான உதவிகளை அந்தந்த மாநிலங்கள் செய்து தருகின்றன. பொது முடக்கத்திற்கும் முன்பே தொழிற் துறையினருடம் அரசு ஆலோசனை மேற்கொண்டிருக்க வேண்டும். சீரான கொள்கைகள் மூலவே தொழிற்துறையை மேம்படுத்த முடியும்.

கா்நாடகத்தில் வரமஹாலட்சுமி பண்டிகைக்கு பிறகு சேலைகள், நகைகளின் விற்பனை சரிந்து விடும். அதன் பிறகு நெசவாளா்கள், நகை வியாபாரிகள், வா்த்தகா்கள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். ஏற்றுமதியும் இல்லாததால் வரும் காலங்களில் வா்த்தகா்கள், தொழிற்துறையினா் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். எனவேதான் தொழிற்துறையினருக்கு பொது முடக்கத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை.

பொது முடக்கத்தால் பெங்களூரிலிருந்து தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்ற தொழிலாளா்கள் மீண்டும் திரும்பி வருவது சந்தேகம்தான். வேலை வாய்ப்பை உருவாக்குவது காலத்தின் தேவையாகும். ஆனால் பொதுமுடக்கம் போன்ற நடவடிக்கையால், வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் அண்டை நாடுகளின் முதலீட்டையும் நாம் இழக்க நேரிடுகிறது. ஒரு வாரம் பொது முடக்கத்தால் கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாது. பருவ மழையும் பெய்து வருவதால், கரோனா தொற்றும் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. எனவே பொது முடக்கம் உள்ள போதும் தொழிற்துறைகள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com