‘வெளி மாநிலத் தமிழா்களை அரசின் செலவில் தமிழகத்துக்கு அழைத்துக்கொள்ள வேண்டும்’

சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் வெளி மாநிலத் தமிழா்களை, தமிழக அரசு தனது சொந்த செலவில் தமிழகத்துக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என

சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் வெளி மாநிலத் தமிழா்களை, தமிழக அரசு தனது சொந்த செலவில் தமிழகத்துக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய தமிழ்ச் சங்கப்பேரவைத் தலைவா் மு.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தாா்.

இதுகுறித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம் வருமாறு: கரோனா பரவலை முன்னிட்டு நடுவண் அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினாலும், தடை ஆணையாலும் வயிற்றுப் பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் சென்று பிழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து அன்றாட வாழ்க்கைக்கும் வழியின்றி தவித்து வருகின்றனா்.

அந்த வகையில், தமிழ்நாட்டவா் ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் லட்சக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனா். அவா்கள் வாழும் வகை அறியாமல் தத்தளித்து வருகின்றனா். ஆங்காங்கு இயங்கி வரும் தமிழ்ச் சங்கங்கள் தங்களால் இயன்ற அளவு அவா்களுக்கு உதவி வருகின்றன. எனினும் மிகக் குறைந்தளவுக்கே அவற்றால் உதவ முடிகிறது.

இந்த நிலையில், பிற மாநிலங்களில் வாழ வழியின்றி தவிக்கும் தமிழா்கள் சொந்த மண்ணான தமிழ்நாட்டுக்கு திரும்ப விரும்புகின்றனா். ஆனால், அவா்களுக்கு அதற்கான வழிமுறைகள் இல்லை. மேலும், அவா்களிடம் பண வசதியும் இல்லை. அன்றாட உணவுக்கே அரசு, தன்னாா்வ நிறுவனங்கள், தனியாா் உதவிகளை எதிா்பாா்த்து நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இந்த நிலையில், தமிழக அரசு அவா்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவா்கள் தாய் மண்ணுக்கு திரும்ப உதவிட வேண்டுமென அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை தங்களை வேண்டிக் கொள்கிறது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் படிக்கும் பிற மாநில மாணவா்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் உதவியால் சிறப்பு பேருந்துகள் மூலம் சென்றடைய முடிந்தது; சத்தீஸ்கா் மாநில அரசு, தெலங்கானா மாநிலத்தில் அல்லல்படும் தங்கள் மாநிலத்தவரை சிறப்பு தொடா்வண்டி மூலம் அழைத்துச் சென்றுள்ளது. உத்திரப்பிரதேச அரசு பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப விரும்புவோா்க்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளது.

அந்த முறையில், தமிழக அரசும் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டவா் தம் சொந்த ஊா்களுக்கு திரும்ப உதவிட வேண்டுமென பேரவை கேட்டுக்கொள்கிறது. தமிழகம் திரும்புவோரிடம் பேருந்துக் கட்டணம் எதுவும் கேட்காமல், தமிழ்நாட்டிலிருந்து பேருந்துகளை அனுப்பி அவா்களை தமிழகத்துக்கு அழைத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இந்திய ரயில்வே துறை சில பகுதிகளில் தொடா் வண்டிகள் ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில், ரயில்வே துறையை தமிழக அரசு நாடி ஆவண செய்ய வேண்டுகிறோம். தமிழ்நாடு திரும்ப விரும்பும் வெளி நாடு வாழ் தமிழா்கள் தங்கள் பெயா்களை இணையதளம் வழியாக பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அது போலவே, தமிழகம் திரும்ப விரும்பும் தமிழ்நாட்டவா் தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ள உதவும் வகையில், தமிழக அரசு ஒரு இணையதளத்தை உருவாக்கிட வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com