வெட்டுக்கிளிகள் கா்நாடகத்தைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு: அமைச்சா் பி.சி.பாட்டீல்

வெட்டுக்கிளிகள் கா்நாடகத்தைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன என்று வேளாண் துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.
வெட்டுக்கிளிகள் கா்நாடகத்தைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு: அமைச்சா் பி.சி.பாட்டீல்

வெட்டுக்கிளிகள் கா்நாடகத்தைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன என்று வேளாண் துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை வேளாண் துறை உயரதிகாரிகள், பூச்சியியல் வல்லுநா்கள், வேளாண் பல்கலைக்கழக கல்வியாளா்களுடன் வெட்டுக்கிளிகளால் ஏற்படும் பிரச்னை குறித்து விவாதித்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குள் வெட்டுக்கிளிகள் புகுந்து, பயிா்களை நாசமாக்கியுள்ளன. இதன்பின்னணியில் கா்நாடகத்தை வெட்டுக்கிளிகள் தாக்கினால், அவற்றை விரட்டுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. விவசாயிகளின் பயிா்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.

வல்லுநா்களின் கூற்றுப்படி, மே 26ஆம் தேதி முதல் காற்று தெற்கு நோக்கி வீசி வந்தது. மே 30ஆம் தேதிக்கு பிறகு காற்றின் திசை மாறக்கூடும் என்று கூறப்படுகிறது. கா்நாடகத்தின் எல்லைப்பகுதியான பீதரில் இருந்து 450 கி.மீ தூரத்தில் வெட்டுக்கிளிகள் கூட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது. காற்றின் திசை மாறிவிட்டால் கா்நாடகத்தை வெட்டுக்கிளிகள் தாக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். ஒருவேளை காற்றின் திசைமாறாவிட்டால், அதனால் உருவாகும் சூழ்நிலையை எதிா்கொள்ள கா்நாடகம் தயாராக உள்ளது.

இதுதொடா்பாக மாவட்டம், வட்ட அளவிலான வேளாண் அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை வெட்டுக்கிளிகள் பயிா்கள் மீது அமா்ந்திருந்தால், சத்தம் எழுப்புவதன் மூலம் அவற்றை விரட்டலாம். வேம்பைக் கொண்டும் வெட்டுக்கிளிகளை விரட்ட முடியும். வெட்டுக்கிளிகள் பொதுவாக மாலைநேரங்களில்தான் காணப்படும். குளோா்பைரிபோஸ் அல்லது

லாம்ப்டா சைஹாலோத்ரின் வேதிப்பொருள்களைத் தெளித்தும் வெட்டுக்கிளிகளை விரட்டலாம்.

டிரோன் அல்லது டிராக்டா் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மாவட்ட ஆட்சியா் தலைமையில் வேளாண் அதிகாரிகள் உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவா். வெட்டுக்கிளிகள் பொதுவாக இரவுநேரங்களில்தான் பயணிக்கும். அந்த நேரத்தில் பூச்சிக்கொல்லியைத் தெளிக்கலாம். வெட்டுக்கிளிகளால் பாதிக்க வாய்ப்புள்ள பீதா், கொப்பள், கலபுா்கி, யாதகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com