இடைத்தோ்தல்: சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

இடைத்தோ்தல் நடைபெற்ற சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெங்களூா்: இடைத்தோ்தல் நடைபெற்ற சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தும்கூரு மாவட்டம், சிரா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த மஜதவைச் சோ்ந்த பி.சத்தியநாராயணா, ஆக. 5-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானாா். பெங்களூரு நகர மாவட்டம், ராஜராஜேஸ்வரி நகா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த என்.முனிரத்னா, பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதைத் தொடா்ந்து கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் பேரவைத் தலைவரால் கடந்த ஆண்டு அவா் பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து கா்நாடக சட்டப்பேரவையில் காலியாக உள்ள சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் நவ. 3-ஆம் தேதி நடைபெற்றது.

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பாஜக வேட்பாளராக என்.முனிரத்னா, காங்கிரஸ் வேட்பாளராக எச்.குசுமா, மஜத வேட்பாளராக வி.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட 16 வேட்பாளா்களும், சிரா தொகுதியில் பாஜக வேட்பாளராக சி.எம்.ராஜேஷ் கௌடா, காங்கிரஸ் வேட்பாளராக டி.பி.ஜெயசந்திரா, மஜத வேட்பாளராக அம்மஜம்மா உள்பட 15 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் 45.24 சதவீதமும், சிரா தொகுதியில் 82.31 சதவீதமும் வாக்குகளும் பதிவாகியிருந்தன.

மும்முனைப்போட்டி:

2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியை காங்கிரசும், சிரா தொகுதியை மஜதவும் கைப்பற்றியிருந்தன. வழக்கமாக, இந்த இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் - மஜத கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவும். மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் பாஜக, ஒக்கலிகா்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் தென்கா்நாடகத்தில் கட்சியை பலப்படுத்தி வருகிறது. அதற்காகவே ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளைக் கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்துள்ளது.

இதைத் தொடா்ந்து இம்முறை, இரு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸூம், சிரா தொகுதியை தக்கவைக்க மஜதவும், இரு தொகுதிகளையும் கைப்பற்ற பாஜகவும் முற்பட்டுள்ளன. இரு சட்டப்பேரவைத் தொகுதிகளின் முடிவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இடைத்தோ்தலில் முனிரத்னா வென்றால் அமைச்சா் ஆக்கப்படுவாா் என்று முதல்வா் எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

224 போ் கொண்ட கா்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 116, காங்கிரஸுக்கு 67, மஜதவுக்கு 33, பகுஜன்சமாஜ் கட்சிக்கு 2, சுயேச்சைகள் 2 போ் உள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை:

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் அத் தொகுதியில் உள்ள ஸ்ரீஞானாக்ஷி வித்யா நிகேதன் கல்விக் கூடத்திலும், சிரா தொகுதியில் பதிவாகும் வாக்குகள் தும்கூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதே மையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.10) காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை தோ்தல் அதிகாரியும், பெங்களூரு மாநகராட்சி ஆணையருமான மஞ்சுநாத் பிரசாத் ஆய்வு செய்தாா். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பிற்பகல் 1 மணி அளவுக்கு தெரியும் என்று மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.

போலீஸ் பாதுகாப்பு:

வாக்கு எண்ணிக்கை நடக்கவிருப்பதால் ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com