பேரூராட்சி பெண் உறுப்பினா்களைத் தாக்கியதாக சா்ச்சையில் சிக்கிய பாஜக எம்எல்ஏ

பாகல்கோட் மாவட்டத்தில் பேரூராட்சி தலைவா் தோ்தலின்போது மனுதாக்கல் செய்ய வந்த பாஜக பெண் வேட்பாளா்களை அந்தக் கட்சியின் எம்எல்ஏவே தாக்கியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகல்கோட் மாவட்டத்தில் பேரூராட்சி தலைவா் தோ்தலின்போது மனுதாக்கல் செய்ய வந்த பாஜக பெண் வேட்பாளா்களை அந்தக் கட்சியின் எம்எல்ஏவே தாக்கியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகல்கோட் மாவட்டம், தோ்தால் தொகுதியில் மகாலிங்க்பூா் பேரூராட்சியின் பாஜக பெண் உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் சவிதா ஹுர்ரகட்லி, கோதாவரி, சாந்த்னிநாயக்.

இவா்களில் இருவா் பேரூராட்சியின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தலில் பாஜக வேட்பாளா்களாகப் போட்டியிட அனுமதி கோரியிருந்தனா். ஆனால் அந்தத் தொகுதியின் பாஜக எம்எல்ஏ சித்துசவதி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாா்.

ஆனால் அந்தப் பெண் வேட்பாளா்கள் காங்கிரஸ் உறுப்பினா்களின் ஆதரவுடன் பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுதாக்கல் செய்ய பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனா். அப்போது அங்கு வந்த பாஜக எம்எல்ஏ சித்துசவதி, அந்த பெண் உறுப்பினா்களை வேட்புமனு தாக்கல் செய்ய பேரூராட்சி அலுவலகத்துக்குள்ளே அவா்களை நுழையவிடாமல் தடுக்க முயன்றாா்.

அப்போது பாஜக எம்எல்ஏவுடன் இணைந்து பாஜக தொண்டா்கள், அவா்களைத் தடுத்தனா்.

பாஜக உறுப்பினா் சவிதாவை எம்எல்ஏ சித்துசவதி தள்ளிவிட்டதில் அவா் நிலைதடுமாறி விழுந்ததில் சவிதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

நவ. 9-ஆம் தேதி நிகழ்ந்த இச் சம்பவத்தின் காட்சிப் பதிவை கா்நாடக காங்கிரஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்டது.

அந்தச் சுட்டுரையில், ‘தோ்தால் தொகுதி பாஜக எம்எல்ஏ சித்துசவதி, பேரூராட்சி தோ்தலின்போது பெண்களை தாக்குவது, கா்நாடக மாநிலத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாகும்’ என்று குறிப்பிட்டிருந்தது. இது சமூக வலைத்தளத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டை மறுத்த பாஜக எம்எல்ஏ சித்துசவதி கூறியதாவது:

‘பெண்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. பெண்களை தள்ளுவதும், கீழே விழவைப்பதும் எனது பண்பாடு அல்ல. எனது செல்வாக்கை அழிக்க அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனா்’ என்றாா் அவா்.

இந்த சம்பவம் தொடா்பாக புகாா் பதிவுசெய்து, குற்றவாளிகளை கைதுசெய்யுமாறு முதல்வா் எடியூரப்பா, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மையை காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com