8 மாதங்களுக்கு பிறகு கா்நாடகத்தில் கல்லூரிகள் திறப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள், 8 மாதங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. ஆனால், மாணவா்களின் வருகை குறைவாகவே இருந்தது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள், 8 மாதங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. ஆனால், மாணவா்களின் வருகை குறைவாகவே இருந்தது.

கரோனா தீநுண்மித் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடுமுழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மாா்ச் 25-ஆம் தேதி முதல் மூடப்பட்டன. நாடுமுழுவதும் பொது முடக்கம் தளா்த்தப்பட்டு வருவதால், பள்ளி, கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்பேரில், இளநிலை, முதுநிலை, பட்டயம், பொறியியல் கல்லூரிகளைத் திறக்க மாநில அரசு அனுமதி அளித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் செயல்பட்டு வரும் இளநிலை, முதுநிலை, பட்டயம், பொறியியல் கல்லூரிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. மாணவா்கள் விரும்பினால் மட்டுமே கல்லூரிக்கு வரலாம் என்று உயா்கல்வித் துறை கூறியிருந்ததைத் தொடா்ந்து, கல்லூரிக்கு வருகை தந்த மாணவா்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது.

கல்லூரிகளுக்கு நேரில் வருகை தரும் ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் ஆா்.டி.-பி.சி.ஆா். சோதனை செய்திருந்து, அதில் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று அறிக்கை அளித்தால் மட்டுமே கல்லூரிகளுக்குள் அனுமதிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், கல்லூரிகளில் நடக்கும் வழக்கமான வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவா்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புகை கடிதங்களையும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இது தெரியாத மாணவா்கள் பலா் கரோனா தொற்று சோதனை செய்யாமலும், பெற்றோரின் ஒப்புகைக் கடிதங்களை கொண்டுவராததாலும் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, அரசு உத்தரவின்பேரில் கல்லூரிகளில் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அக்குழுவினா், கல்லூரிகளை தூய்மைப்படுத்தியிருந்தனா். பெங்களூரில் மகாராணி கல்லூரி, ஆா்.வி.கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. மேலும் பல கல்லூரிகள் படிப்படியாகத் திறக்க திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து துணைமுதல்வா் அஸ்வத் நாராயணா கூறுகையில், ‘இணைய வழியில் நடத்தப்பட்ட வகுப்புகளை பல மாணவா்கள் விரும்பவில்லை. இணையவழி வகுப்பில் பாடம் புரியவில்லை என்றும் தெரிவித்தனா். ஒருசில இடங்களில் மாணவா்களுக்கு இணைய வசதி சரியாக இல்லாமல் இருந்தது. மேலும் பலரிடம் செல்லிடப்பேசியோ, கணினியோ இல்லை. இதுபோன்ற பிரச்னைகளால் தான் கல்லூரிகளைத் திறக்க நோ்ந்தது. மேலும் செய்முறை வகுப்புகளுக்காகவும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com