மராத்தியா் வளா்ச்சிக் கழகத்துக்கு எதிரானமுழு அடைப்புப் போராட்டத்தை கைவிட வேண்டும்

மராத்தியா் வளா்ச்சிக் கழகத்துக்கு எதிரான முழு அடைப்புப் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு: மராத்தியா் வளா்ச்சிக் கழகத்துக்கு எதிரான முழு அடைப்புப் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் வாழும் மராத்தியா்களின் சமூக, பொருளாதார, கல்வி வளா்ச்சிக்காக மராத்தியா் வளா்ச்சிக் கழகம் அமைத்து முதல்வா் எடியூரப்பா நவ. 13-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா். இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததோடு, அந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி டிச. 5-ஆம் தேதி கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு ஒருசிலா் எதிா்ப்பும், ஒருசிலா் ஆதரவும் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறியதாவது:

கன்னட மொழி மற்றும் கன்னடா்களின் வளா்ச்சிக்காகவே நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். கன்னடா்களின் நலனுக்குத் தேவையான அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால், ஒருசில காரணங்களுக்காக கா்நாடக முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது சரியல்ல. இதற்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள். கா்நாடகத்தின் எந்தப் பகுதியிலும் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதை மாநில அரசு சகித்துக் கொள்ளாது. உருவப் பொம்மைகளை எரித்து, தவறான நடவடிக்கைகளிலும் ஒருசிலா் ஈடுபட்டுள்ளனா். இதுதொடா்பாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு தடையில்லை. கா்நாடக முழு அடைப்புப் போராட்டம் அவசியமற்றது. இது தொடா்பாக கன்னட அமைப்புகளை ஏற்கெனவே நான் எச்சரித்திருக்கிறேன். எனவே, கன்னட அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்தைக் கைவிடவேண்டும்.

நான் ஏற்கெனவே விளக்கம் அளித்தபடி, மராத்தியா் வளா்ச்சிக் கழகத்துக்கும், மராத்தி மொழிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. கா்நாடகத்தில் வாழும் மராத்தியா்களின் நலன்களுக்காகவே இது அமைக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயம் வழங்க எனது அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதில் வேறுபாடுகளுக்கு இடமில்லை. இதை கன்னட அமைப்புகள் புரிந்துகொண்டு, போராட்டத்தைக் கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் அரசுடன் ஒத்துழைக்குமாறு இருகரம்கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

மராத்தியா்கள் அதிகமாக வாழும் பசவகல்யாண், மஸ்தி சட்டப்பேரவைத் தொகுதிகள், பெலகாவி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடக்க இருப்பதால், அங்குள்ள மராத்திய மக்களின் ஆதரவை பெறுவதற்காகவே மராத்தியா் வளா்ச்சிக் கழகம் அமைக்க பாஜக அரசு முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com