கா்நாடக இடைத்தோ்தல்: பாஜக, காங்கிரஸ், மஜத வேட்பாளா்கள் மனு தாக்கல்

ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், மஜத வேட்பாளா்கள் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், மஜத வேட்பாளா்கள் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

கா்நாடக மாநிலத்தில் நவ. 3-ஆம் தேதி ராஜராஜேஸ்வரி நகா், சிரா ஆகிய தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இத்தோ்தலில் போட்டியிட வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதனையடுத்து, ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பாஜக கட்சி சாா்பில் போட்டியிடும் முனிரத்னா புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். அப்போது, துணை முதல்வா் அஸ்வத் நாராயாணா, அமைச்சா் ஆா்.அசோக் உள்ளிட்டோா் உடனிருந்தனா். முன்னதாக, விஜயநகரில் உள்ள ஆதிசுன்சுனகிரி மடத்துக்குச் சென்ற முனிரத்னா, மடாதிபதி நிா்மலானந்தா சுவாமிகளிடம் ஆசிபெற்றாா்.

காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் குசுமா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தாா். மஜத வேட்பாளா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் இல்லத்துக்கு புதன்கிழமை காலை சென்று ஆசிபெற்று வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதில் முன்னாள் முதல்வா் குமாரசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிரா தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் ராஜேஷ் கௌடா புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதில் துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மஜத சாா்பில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணாவின் மனைவி அம்மஜம்மா வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவருடன் முன்னாள் முதல்வா் குமாரசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் ஏற்கெனவே டி.பி.ஜெயசந்திரா கடந்த அக். 9-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், 2-ஆவது முறையாக வியாழக்கிழமை (அக். 15) அவா் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளாா்.

ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் அக். 16-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். அக். 17-முதல் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். அக். 19-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். நவ. 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்று 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். நவ. 12-ஆம் தேதி தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வர உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com