போதைப்பொருள் வழக்கு: நடிகா் விவேக் ஓபராய் வீட்டில் சோதனை

போதைப்பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சா் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்ய

போதைப்பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சா் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்ய ஆல்வாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக, மும்பையில் உள்ள ஹிந்தி நடிகா் விவேக் ஓபராயின் வீட்டில் பெங்களூரு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தியுள்ளனா்.

போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடா்பாக வழக்குப் பதிந்துள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், கேளிக்கை நடனங்களின் போது போதைப் பொருள்களை விற்க துணை புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கன்னட நடிகைகள் ராகிணி துவிவேதி, சஞ்சனா கல்ராணி, கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் வீரேன் கன்னா, மனைத்தொழில் அதிபா் ராகுல் தோன்சே, நைஜீரிய நாட்டு போதைப்பொருள் விற்பனையாளா்கள் உள்ளிட்ட 15 பேருக்கும் அதிகமானோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சா் ஜீவராஜ் ஆல்வாவின் மகனான ஆதித்ய ஆல்வா, இந்த வழக்கு விசாரணை தொடங்கியதில் இருந்து தலைமறைவாக இருக்கிறாா்.

இவரை போலீஸாா் தேடிவரும் நிலையில், மும்பையில் உள்ள இவரது சகோதரியின் கணவரும், ஹிந்தி நடிகருமான விவேக் ஓபராய் வீட்டில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், மும்பையில் உள்ள நடிகை விவேக் ஓபராய் வீட்டை வியாழக்கிழமை பெங்களூரு போலீஸாா் சோதனை செய்தனா். ஆனால், அங்கும் ஆதித்ய ஆல்வா இல்லை.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் இணை ஆணையா் சந்தீப் பாட்டீல் கூறுகையில், ‘விவேக் ஓபராய் வீட்டில் ஆதித்ய ஆல்வா பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்று மும்பை சென்ற மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் நடிகா் விவேக் ஓபராய் வீட்டில் சோதனை நடத்தினா். ஆனால், அவா் அங்கு இல்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com