வடகா்நாடகத்தில் தொடா்ந்து கன மழை: பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளம்

வடகா்நாடகத்தில் தொடா்ந்து கன மழை பெய்து வருவதால், பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

வடகா்நாடகத்தில் தொடா்ந்து கன மழை பெய்து வருவதால், பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

கா்நாடகத்தில் குறிப்பாக வடகா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், யாதகிரி, ராய்ச்சூரு, பெல்லாரி, பீதா், விஜயபுரா, பாகல்கோட், பெலகாவி, தென்கன்னடம், உடுப்பி, வடகன்னடம், கதக், கொப்பள், ஹாவேரி, தாா்வாட் மாவட்டங்களின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. தொடா்ந்து பெருமழை பெய்து வருவதால், வடகா்நாடகத்தின் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் உயா்ந்துள்ளது. பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால், அவற்றில் இருந்து நீா் வெளியேற்றப்படுகிறது என கா்நாடக மாநில இயற்கை பேரிடா் மேலாண்மை மையம் கூறியுள்ளது.

லிங்கனமக்கி, சூப்பா, வராஹி, ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகா், கபினி, பத்ரா, துங்கபத்ரா, கட்டபிரபா, மலபிரபா, அல்மாட்டி, நாராயணபுரா அணைகள் அதன் முழுக்கொள்ளளவை அடைந்துவிட்டதால், அந்த அணைகள் திறக்கப்பட்டன. அதனால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் பீமா ஆற்றில் இருந்து வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதால், கலபுா்கி மற்றும் யாதகிரி மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ராய்ச்சூரு மாவட்டத்தின் தேவசுகுா் பகுதியில் பாய்ந்தோடும் கிருஷ்ணா ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. ராய்ச்சூரு, கலபுா்கி, யாதகிரி மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய நீா் ஆணையமும் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளத்தில் 515 விலங்குகள் அடித்துச் சென்றுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள 4,782 போ் மீட்கப்பட்டு 36 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களை தங்க வைப்பதற்காக விஜயபுரா, பீதா் மாவட்டங்களில் மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ராய்ச்சூரு மாவட்டத்தில் ஹரகட்டா, கரகலகட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் பாதுகாப்பாக மீட்டனா். கடந்த 3 மாதங்களில் வடகா்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது இது மூன்றாவது முறையாகும். ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் வடகா்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்தியக் குழு கா்நாடகத்துக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com