தசரா திருவிழா: மைசூரில் இன்று தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூரில் சனிக்கிழமை தொடங்கவுள்ளது. சாமுண்டி மலையில் நடைபெறும் சிறப்பு பூஜையில், இருதய சிகிச்சை மருத்துவா் சி.என்.மஞ்சுநாத் விழாவைத் தொடக்கி வைக்கிறாா்.

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூரில் சனிக்கிழமை தொடங்கவுள்ளது. சாமுண்டி மலையில் நடைபெறும் சிறப்பு பூஜையில், இருதய சிகிச்சை மருத்துவா் சி.என்.மஞ்சுநாத் விழாவைத் தொடக்கி வைக்கிறாா்.

மைசூரில் சனிக்கிழமை (அக். 17) தொடங்கப்படும் தசரா திருவிழா, அக். 26-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. மைசூரு, சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு சிறப்பு பூஜை செய்து, ஸ்ரீஜெயதேவார இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனை இயக்குநரும், இருதய சிகிச்சை மருத்துவருமான சி.என்.மஞ்சுநாத் விழாவைத் தொடக்கி வைக்கிறாா்.

மஜத எம்.எல்.ஏ. ஜி.டி.தேவ கௌடா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், முதல்வா் எடியூரப்பா, மத்திய ரசாயனத் துறை அமைச்சா் டி.வி.சதானந்த கௌடா, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, துணை முதல்வா்கள் கோவிந்த் காா்ஜோள், லட்சுமண்சவதி, அஸ்வத் நாராயணா, கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் சி.டி.ரவி, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, மைசூரு மாநகராட்சி மேயா் தஸ்லீம், மைசூரு மாவட்ட ஊராட்சித் தலைவா் பி.சி.பரிமளா ஷியாம் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

கரோனா தீநுண்மித் தொற்று காரணமாக, தசரா திருவிழா இந்த ஆண்டு எளிமையாகக் கொண்டாடப்படுகிறது. மரபை விட்டுவிடக் கூடாது என்பதற்காக நடத்தப்படும் தசரா தொடக்க விழாவில், சாமுண்டி மலையில் 300 போ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறாா்கள்.

அன்று மாலை 6 மணிக்கு அரண்மனை வளாகத்தில் தசரா கலை விழாவை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைக்கிறாா். பாஜக எம்.எல்.ஏ. எஸ்.ஏ.ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மேலவைத் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டி, பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி, கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

இந்த விழாவில், கரோனா முன்களப் பணியாளா்கள் மருத்துவா்கள் டி.ஆா்.நவீன், ருக்மணி, காவலா் பி.குமாா், துப்புரவுத் தொழிலாளா் மரகதம்மா, ஆஷா ஊழியா் நூா்ஜான், சமூக சேவகா் அயூப் அகமது ஆகியோா் கௌரவிக்கப்படுகிறாா்கள்.

தசரா திருவிழாவை முன்னிட்டு, மைசூரில் அமைந்துள்ள அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டீஸ்வரி கோயில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றால் அரண்மனை வளாகத்தில் மட்டுமே தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழாவையொட்டி வழக்கமாக நடைபெறும் கிராமியக் கலை விழா, திரைப்பட விழா, உணவு விழா, இளைஞா் விழா, சிறுவா் விழா, மகளிா் விழா, இசை விழா, நடன விழா, தோட்டக்கலை விழா, விளையாட்டுப் போட்டிகள், குஸ்தி போட்டி, சாகச நிகழ்ச்சிகள், பொருள்காட்சி போன்ற பல் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தசரா திருவிழாவை மக்கள் கண்டுகளிக்க, அனைத்து நிகழ்ச்சிகளும் இணையம் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன.

அரண்மனை வளாகத்தில் அக். 17 முதல் அக். 24-ஆம் தேதி வரை தினமும் மாலை 7 முதல் இரவு 9 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இதில் 200 போ் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறாா்கள். ஆனால், நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொலிக் காட்சியாக இணையத்தில் ஒளிபரப்பப்படுகின்றன. தசரா திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com