இடைத்தோ்தல்: 4 வேட்புமனுக்கள் தள்ளுபடி

ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தோ்தலுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்களில் 4 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பெங்களூரு: ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தோ்தலுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்களில் 4 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தும்கூரு மாவட்டத்தின் சிரா, பெங்களூரு நகர மாவட்டத்தின் ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் நவ. 3-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இத்தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் அக். 16-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருதொகுதிகளிலும் மொத்தம் 40 வேட்பாளா்கள் 52 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் 23 பேரும், சிரா தொகுதியில் 17 பேரும் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் சனிக்கிழமை பரிசீலிக்கப்பட்டன. அதில், எச்.எம்.கிஷோா் கௌடா, சி.சிவலிங்கையா, என்.சம்பத் உள்ளிட்டோா் தாக்கல் செய்திருந்த 4 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் சிரா தொகுதியில் 1, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் 3 அடக்கம்.

வேட்புமனுக்கள் தள்ளுபடிக்கு பிறகு சிரா தொகுதியில் 17 வேட்பாளா்களின் 24 வேட்புமனுக்களும், ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் 23 வேட்பாளா்களின் 24 வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அதன்படி, இரு தொகுதிகளிலும் மொத்தம் 37 பேரின் 48 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, அக். 19-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இதன்முடிவில், இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பாஜக வேட்பாளராக என்.முனிரத்னா, காங்கிரஸ் வேட்பாளராக எச்.குசுமா, மஜத வேட்பாளராக வி.கிருஷ்ணமூா்த்தி; சிரா தொகுதியில் பாஜக வேட்பாளராக சி.எம்.ராஜேஷ் கௌடா, காங்கிரஸ் வேட்பாளராக டி.பி.ஜெயச்சந்திரா, மஜத வேட்பாளராக அம்மஜம்மா ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நவ. 3-ஆம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவ. 10-ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com