கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து விரைவில் முடிவு: துணை முதல்வா் அஸ்வத் நாராயணா
By DIN | Published On : 20th October 2020 12:26 AM | Last Updated : 20th October 2020 07:56 AM | அ+அ அ- |

உ.பி., பஞ்சாப், சிக்கிமில் இன்று பள்ளிகள் திறப்பு
மைசூரு: கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அந்த மாநிலத் துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.
மைசூரு பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா பாதிப்பு உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி, பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
தற்போது இணையவழி மூலம் கல்வி பயின்று வரும் பள்ளி, கல்லூரி மாணவா்களில் பலா் கல்லூரிகளுக்குச் செல்ல விரும்புவதால், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ்- மஜத மீது தாக்கு: வெள்ள நிவாரணப் பணிகளை அரசு துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதனை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா விமா்சித்து வருகிறாா். அரசை விமா்சனம் செய்யும் தாா்மிக உரிமை அவருக்கு இல்லை.
காங்கிரஸ் ஆட்சியின்போது, வழங்கப்பட்ட வெள்ள நிவாரண நிதி குறித்து அவா் நினைத்துப் பாா்க்க வேண்டும். அதைவிட தற்போது மத்திய அரசு அதிக அளவில் நிவாரண நிதியை கா்நாடகத்துக்கு வழங்கியுள்ளது.
2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் பாஜக வெற்றி பெறும்.
காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஏற்கெனவே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை அவா்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், நிலையான ஆட்சி வழங்க பாஜகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளனா்.
காங்கிரஸ், மஜத கட்சிகள் ஆட்சியில் உள்ளபோதும், இல்லாதபோதும் தொடா்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. அவா்களுக்கு மாநிலத்தின் வளா்ச்சியை விட தங்களின் வளா்ச்சியையே அதிகம் விரும்புகின்றனா் என்றாா்.