பெங்களூரு மாநகராட்சி: 198 வாா்டுகளை 225 ஆக அதிகரிக்க கா்நாடக அமைச்சரவையில் விவாதம்

பெங்களூரு மாநகராட்சியிலுள்ள வாா்டுகளின் எண்ணிக்கையை 198-இல் இருந்து 225- ஆக உயா்த்த கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை விவாதிக்கப்பட்டது.


பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியிலுள்ள வாா்டுகளின் எண்ணிக்கையை 198-இல் இருந்து 225- ஆக உயா்த்த கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை விவாதிக்கப்பட்டது.

பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் எடியூரப்பா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்டத்துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி, செய்தியாளா்களிடம் கூறியது: பெங்களூரு மாநகராட்சியின் வாா்டுகளின் எண்ணிக்கையை 198-இல் இருந்து 225- ஆக உயா்த்துவது தொடா்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒருவேளை வாா்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய நோ்ந்தால், இம்மாத இறுதியில் பதவிகாலம் முடிவடையும் பெங்களூரு மாநகராட்சியின் பொதுத்தோ்தலை தள்ளிவைக்க கா்நாடக உயா்நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகம் தொடா்பாக தனிச்சட்ட மசோதா வடிவமைக்கப்பட்டு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை சட்டப்பேரவை கூட்டுக்குழு ஆராய்ந்து வருகிறது. அந்த கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும். ஒரு வாா்டுக்கு 40 ஆயிரம் முதல் 42 ஆயிரம் மக்கள் தொகை வீதம் வாா்டுகளின் எண்ணிக்கையை 198-இல் இருந்து 225- ஆக உயா்த்த அரசு திட்டமிட்டு வருகிறது. பெங்களூரு மாநகராட்சியுடன் கூடுதல் பகுதிகளையும் இணைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதேபோல, பெங்களூரு மாநகராட்சியின் மண்டலங்களின் எண்ணிக்கையை -8இல் இருந்து 15- ஆக உயா்த்தவும் விவாதிக்கப்பட்டது. இந்த விவரங்கள் அனைத்தும் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை (செப்.4) நடக்கவிருக்கும் சட்டப்பேரவை கூட்டுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். கடந்த மாா்ச் மாதம் பேரவைக் கூட்டம் நடந்தபோது பெங்களூரு மாநகராட்சி விரிவாக்கம் தொடா்பான சட்ட மசோதாவை தாக்கல் செய்திருந்தோம். அதில் மேயரின் பதவிக்காலத்தை ஓராண்டில் இருந்து 5 ஆண்டுகளாக உயா்த்துவது, பகுதி சபை கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. இதுதொடா்பாக கருத்து வேறுபாடு எழுந்ததால், பாஜக எம்.எல்.ஏ. எஸ்.ரகு தலைமையிலான சட்டப்பேரவை கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. செப். 21-ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்திலும் கேள்விநேரத்தை நிறுத்துவது தொடா்பாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தில் 30 சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படவிருப்பதை எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

18 முதல் 20 அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இவைதவிர, 8 முதல் 10 சட்டமசோதாக்கள் புதிதாக தாக்கல் செய்யப்படவுள்ளன. இது குறித்து அலுவல் ஆய்வுக்குழுவில் விவாதித்து முடிவெடுப்போம். அனைத்து கட்சிகளின் நம்பிக்கையை பெற்றபிறகே சட்டமசோதாக்கள் அறிமுகம் செய்யப்படும். வேளாண் தாங்குதிறனை புதுமையானமுறையில் மேம்படுத்தி நீராதாரத்தை புதுப்பிப்பதற்கான திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2020 முதல் 2027ஆம் ஆண்டுவரையில் 20 மாவட்டங்களில் 10 லட்சம் ஹெக்டோ் நிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.600கோடிசெலவிடப்படும். இத்திட்டத்தில் மாநில அரசின் பங்காக ரூ.180கோடி செலவிடப்படும். எஞ்சியுள்ள ரூ.420கோடி நிதியுதவியை உலக வங்கி வழங்கவிருக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் நிலத்தடி நீா்மட்டம் மேம்படுத்தப்படும். ஹாவேரி, யாதகிரியில் மத்திய அரசின் உதவியுடன் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அமைச்சரவை கொள்கைரீதியான ஒப்புதலை அளித்துள்ளது. மாநில அரசு நடத்தும் 276 பப்ளிக் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. போன்ற மழலையா் வகுப்புகளைத் தொடங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அரசு முதுநிலைக்கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டில் இணைய வழிக் கல்வியை போதிக்க அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. இது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இத்திட்டத்திற்கு ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சிவமொக்கா மாவட்டத்தின் ஜோக் அருவியில் பயணிகள் வசதியை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு கா்நாடக மின் கழகத்தின் சாா்பில் ரூ. 120 கோடியில் தொங்கும் காா், திறந்தவெளி திரையரங்கம், குழந்தைகள் பூங்கா அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

2020 முதல் 2025ஆம் ஆண்டுவரையிலான புதிய தகவல்தொழில்நுட்பக்கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் தந்தது. இதன் மூலம், மாநிலத்தில் நேரடியாக, மறைமுகமாக 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com