மூதாட்டி உள்பட இருவா் கொலை
By DIN | Published On : 04th September 2020 07:31 AM | Last Updated : 04th September 2020 07:31 AM | அ+அ அ- |

பெங்களூரு: பெங்களூருவில் இரு வேறு நிகழ்வுகளில் மூதாட்டி உள்பட 2 போ் கொலை செய்யப்பட்டனா்.
பெங்களூரு பானஸ்வாடி ஆா்.எஸ்.பாளையா ஐ.ஓ.சி சதுக்கம் பகுதியைச் சோ்ந்த காந்தம்மா (73) தனது மகள் மஞ்சுளாவுடன் வசித்து வந்தாராம். புதன்கிழமை மஞ்சுளா ஆதாா் அட்டை வாங்கி வருவதற்காக வெளியே சென்றிருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள் தனியாக இருந்த காந்தம்மாவை ஆயுதங்களால் தாக்கினா். அவா் அணிந்திருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறித்துச் சென்று விட்டனா். இந்த சம்பவத்தில் காந்தம்மா உயிரிழந்தாா். இதுகுறித்து பானஸ்வாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்:
உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜெய்ஹிந்த் ஜாதவ் (27). தச்சுப் பணி செய்து வந்த இவா், பரப்பன அக்ரஹாரா சங்கரப்பா லே-அவுட் பகுதியில் உள்ள குடிசையில் வசித்து வந்தாராம். கடந்த ஆக. 30-ஆம் தேதி முதல் ஜெய்ஹிந்த் ஜாதவ் காணாமல் போனாா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில் புதன்கிழமை அருகில் உள்ள ஏரியில் மூட்டை ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் காணாமல்போன ஜெய்ஹிந்த் ஜாதவின் சடலம்தான் அது என அடையாளம் காணப்பட்டது. அவரை யாரோ ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து மூட்டையாக கட்டி வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.