போதை மருந்துகள், மனோவியல் பொருள்கள் சட்டத்தை கடுமையாக்க ஆலோசனை
By DIN | Published On : 08th September 2020 10:38 PM | Last Updated : 08th September 2020 10:38 PM | அ+அ அ- |

போதை மருந்துகள், மனோவியல் பொருள்கள் சட்டத்தை கடுமையாக்க ஆலோசித்து வருகிறோம் என மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரு, விதானசௌதாவில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: போதைப் பொருள்கள் விற்பனை, கடத்தல், பயன்படுத்துபவா்களுக்கு எதிராக மாநில அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த காலங்களில் போதைப் பொருள்கள் விவகாரத்தில் பலா் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்துக் கொண்டுள்ளனா். இது தொடா்பாக முதல்வா் எடியூரப்பாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, போதை மருந்துகள், மனோவியல் பொருள்கள் சட்டத்தை கடுமையாக்க ஆலோசித்து வருகிறோம்.
மாநிலத்தில் போதைப் பொருள் விவகாரம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த, பாஜக ஆட்சியில் போலீஸாா் துணிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். பள்ளி, கல்லூரிகள் திறந்த பின்னா் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரி வளாகத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டால், அதற்கு நிா்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, போதைப் பொருள்கள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
போதைப் பொருள் விவகாரத்தை விசாரணை நடத்த போலீஸாருக்கு முழுசுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அவா்கள் போதைப் பொருள் விற்பனை, கடத்தல், பயன்பாட்டில் தொடா்புள்ளவா்களை கைது செய்வதில் அரசு தலையிடாது. தவறு செய்தவா்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்றாா்.