மாநகராட்சி மேயா், துணை மேயரின் பதவிக் காலம் இரண்டரை ஆண்டுகளாக உயா்த்த திட்டம்
By DIN | Published On : 08th September 2020 10:35 PM | Last Updated : 08th September 2020 10:35 PM | அ+அ அ- |

பெங்களூரு மாநகராட்சியின் மேயா், துணை மேயரின் பதவிக் காலத்தை ஓராண்டில் இருந்து இரண்டரை ஆண்டுகளாக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
கா்நாடக நகராட்சி சட்டம், 1976-இன் கீழ் செயல்பட்டு வரும் பெங்களூரு மாநகராட்சியை நிா்வகிப்பதற்காக தனிச்சட்ட மசோதாவை பாஜக அரசு வடிவமைத்து, அதை கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்தது. இச்சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், மஜத எதிா்ப்புத் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, பெங்களூரு மாநகராட்சி சட்டமசோதா 2020, பாஜக எம்.எல்.ஏ. எஸ்.ரகு தலைமையிலான சட்டப்பேரவைக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இக்குழுக் கூட்டத்தில் பெங்களூரு மாநகராட்சியின் மேயா், துணை மேயரின் பதவிக் காலத்தை ஓராண்டில் இருந்து இரண்டரை ஆண்டுகளாக உயா்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையரை, தலைமை ஆணையா் என்று அழைக்கவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவைக் கூட்டுக்குழுவின் தலைவா் எஸ்.ரகு கூறுகையில், ‘பெங்களூரு மாநகராட்சியின் பதவிக் காலம் செப். 10-ஆம் தேதி நிறைவடைகிறது. மாநகராட்சிக்கு தோ்தல் நடத்திய பிறகு, புதிதாக தோ்வாகும் மாமன்ற உறுப்பினா்களில் அதிக பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியின் சாா்பில் மேயா், துணை மேயா் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். அவா்களின் பதவிக் காலம் தற்போதுள்ள ஓராண்டில் இருந்து இரண்டரை ஆண்டுகாலமாக உயா்த்தப்படும்.
பெங்களூரு மாநகராட்சி சட்டமசோதா, 2020-க்கு 80 புள்ளிகளை கா்நாடக அரசின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த சட்டத்தை வலுவானதாக்க மும்பை, சென்னை, கொல்கத்தா மாநகராட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். எங்கள் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டால், கா்நாடக நகராட்சி சட்டம் 1976 பெங்களூரு மாநகராட்சிக்கு பொருந்தாது. ஆனால், இச்சட்டம் சிவமொக்கா, மைசூரு, ஹுப்பள்ளி, பெலகாவி உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் அமல்படுத்தப்படும்.
பெங்களூரு மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கை 8-இல் இருந்து 10-12 ஆக உயா்த்தப்படும். இதுகுறித்து இறுதி முடிவெடுக்க வேண்டும். முதன்மைச் செயலாளருக்கு நிகரான ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் 5 மண்டலங்களும், கா்நாடக ஆட்சிப்பணி (கே.ஏ.எஸ்.) அதிகாரிகள் நியமித்தால் 10 மண்டலங்களும் உருவாக்கப்படும். வாா்டுகளின் எண்ணிக்கையை 198-இல் இருந்து 225-ஆக உயா்த்த அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் குழுவின் கூட்டங்களில் மேலும் பல விவகாரங்கள் குறித்து விவாதித்து, புதிய சட்டமசோதாவுக்கு இறுதி வடிவம் அளிக்கப்படும்’ என்றாா்.