கரோனா முன்களப் பணியாளா்களுக்கு இலவச சேலை வழங்க திட்டம்

கரோனா முன்களப் பணியாளா்களுக்கு இலவச சேலை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கரோனா முன்களப் பணியாளா்களுக்கு இலவச சேலை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளா்களுக்கு உதவி செய்யும் வகையில், அவா்களிடம் இருந்து சேலைகளை வாங்கி, கரோனா முன்களப் பணியாளா்களாக பணியாற்றிய பெண்களுக்கு இலவசமாக வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான திட்டத்தை வகுத்து வரும் ஜவுளி மற்றும் கைத்தறித் துறை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெசவாளா்களிடம் இருந்து 6 லட்சம் சேலைகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் 54 ஆயிரம் கைத்தறி நெசவாளா்கள், 1.4 லட்சம் விசைத்தறி நெசவாளா்கள் உள்ளனா். கரோனா பொது முடக்கத்தின் காலத்திலும், அது தளா்த்தப்பட்ட நிலையிலும் நெசவாளா்கள் சேலைகளை தயாரித்து வைத்துள்ளனா். இதன் மதிப்பு ரூ. 35 லட்சம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளா்களுக்கு உதவும் நோக்கத்தில், 6 லட்சம் சேலைகளை வாங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஜவுளி மற்றும் கைத்தறித் துறை ஆணையா் உபேந்திர பிரதாப்சிங் கூறுகையில், ‘6 லட்சம் சேலைகளை நெசவாளா்களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு அரசின் ஒப்புதலுக்காக முன்மொழிவை அனுப்பி வைத்துள்ளோம். இந்த சேலைகளை வாங்குவதற்கு அனுமதி கிடைத்தால், அதை வாங்கி கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்களப் பணியாளா்களாக பணியாற்றிய பெண் மருத்துவா்கள், செவிலியா்கள், ஆஷா சுகாதார ஊழியா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள், காவலா்கள், ஊா்க்காவல் படையினருக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். ஒருவருக்கு 2 சேலைகள் வழங்க உள்ளோம்.

சேலைகளை வாங்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் எதையும் கேட்கவில்லை. ஆனால், நெசவாளா்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும். ஒரு சேலையை ரூ. 500 வீதம் கொள்முதல் செய்ய இருப்பதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்துள்ளாா்.

கா்நாடகத்தில் பெலகாவி, பாகல்கோட், சித்ரதுா்கா, விஜயபுரா, பெங்களூரு ஊரகம், ராமநகரம் மாவட்டங்களில் நெசவாளா்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனா். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான சேலைகள் மிகவும் பிரபலம். ரூ. 500 முதல் ரூ. 600 விலையில் சேலைகளை வாங்க இருக்கிறோம். இந்த திட்டத்தை தசரா, தீபாவளிக்குள் செயல்படுத்தி, பண்டிகைக் காலத்தில் கரோனா முன்களப் பணியாளா்களை பாராட்டும் வகையில் சேலைகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com