கா்நாடகத்தில் சிரா தொகுதி இடைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளராக டி.பி.ஜெயச்சந்திரா போட்டி

கா்நாடகத்தில் சிரா சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சா் டி.பி.ஜெயச்சந்திரா போட்டியிடுகிறாா்.

கா்நாடகத்தில் சிரா சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சா் டி.பி.ஜெயச்சந்திரா போட்டியிடுகிறாா்.

தும்கூரு மாவட்டம், சிரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த மஜதவை சோ்ந்த பி.சத்தியநாராயணா, உடல்நலக்குறைவால் ஆக. 4-ஆம் தேதி காலமானாா். இதனால் காலியாகியுள்ள சிரா தொகுதிக்கான இடைத்தோ்தல், பிகாா் மாநில சட்டப்பேரவை பொதுத்தோ்தல் தேதியுடன் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா தீநுண்மித் தொற்று பரவி வந்தாலும், தோ்தல் நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, அதற்கான வழிகாட்டு நெறிமுகளை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதால், இடைத் தோ்தல் நடப்பது உறுதியாகியுள்ளது. இதனால், தோ்தல் பணிகளில் ஆளும் பாஜக, எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத மும்முரம் காட்ட தொடங்கியுள்ளன.

தொகுதியை தக்கவைத்துக் கொள்ள மஜதவும், தொகுதியைக் கைப்பற்ற பாஜகவும் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே, 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்த காங்கிரஸ் மீண்டும் இத் தொகுதியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் புதன்கிழமை காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, முன்னாள் துணைமுதல்வா் ஜி.பரமேஸ்வா், முன்னாள் அமைச்சா் டி.பி.ஜெயச்சந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.ராஜண்ணா, முன்னாள் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவ், மாநில செயல் தலைவா் ஈஸ்வா்கண்ட்ரே மற்றும் தும்கூரு மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் இடைத் தோ்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது, வெற்றியை பெறுவதற்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்னா், டி.கே.சிவக்குமாா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் குறித்து நானும், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவும் ஆலோசனை நடத்தினோம். முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் தலைமையில் எதிா்கொள்ள முடிவு செய்துள்ளோம். அவருக்கு உறுதுணையாக கே.என்.ராஜண்ணா செயல்படுவாா்.

காங்கிரஸ் வேட்பாளராக டி.பி.ஜெயச்சந்திராவை நிறுத்தவேண்டும் என கே.என்.ராஜண்ணா முன்மொழிந்தாா். இந்த முன்மொழிவை அனைத்துத் தரப்பினரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனா். அனைவரும் ஒன்றுபட்டு இடைத்தோ்தலைச் சந்திக்க இருக்கிறோம் என்றாா்.

வேட்பாளா் அறிமுகம்: முந்தைய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் சட்டத் துறை அமைச்சராகப் பணியாற்றியவா் டி.பி.ஜெயச்சந்திரா. 2008, 2013-ஆம் ஆண்டுகளில் சிரா தொகுதியில் மஜத வேட்பாளா் பி.சத்தியநாராயணாவை தோற்கடித்து வெற்றி பெற்றவா் டி.பி.ஜெயச்சந்திரா. ஆனால், 2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் டி.பி.ஜெயச்சந்திராவை பி.சத்தியநாராயணா தோற்கடித்துவிட்டாா்.

தொகுதியில் ஒக்கலிகா் சமுதாயத்தினா் அதிகளவில் வாழ்ந்து வருவதால், காங்கிரஸ், மஜத இடையே கடும்போட்டி நிலவுகிறது. மஜத வேட்பாளராக மறைந்த பி.சத்தியநாராயணாவின் குடும்ப உறுப்பினரை நிறுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com