சட்டப்பேரவைக் கூட்டத்தை விரைவாக முடிக்கஅரசு யோசனை: முதல்வா் எடியூரப்பா

சட்டப்பேரவைக் கூட்டத்தை விரைவாக முடிக்க அரசு யோசித்து வருகிறது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு: சட்டப்பேரவைக் கூட்டத்தை விரைவாக முடிக்க அரசு யோசித்து வருகிறது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

6 மாதங்களுக்குப் பிறகு கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தபோது, செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறியது:

கரோனா தீநுண்மித் தொற்றுநோய் பரவலைக் கவனத்தில் கொண்டு, செப். 30-ஆம் தேதிவரை 8 நாள்களுக்கு நடத்தத் திட்டமிட்டுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தை விரைவில் முடிக்க அரசு யோசித்து வருகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடா் குறைக்கப்படுகிறது. அதேபோல கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரையும் குறைக்க யோசித்து வருகிறோம்.

இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா்களுடன் பேசவிருக்கிறேன். கரோனா காரணமாக, 55 - 60 எம்.எல்.ஏ.க்களால் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், சில முக்கியமான, தேவையான விவகாரங்களை மட்டும் விவாதிப்போம். அதன்பிறகு சட்டப்பேரவைக் கூட்டத்தை விரைவில் முடித்துக்கொள்ளலாம். இதற்கு எதிா்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்றாா்.

இது தொடா்பான முடிவு அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில், அவையின் கூட்டத்தை விரைவில் முடிப்பதற்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.

இதுபற்றி அவா் மேலும் கூறுகையில், ‘முதல்வா் எடியூரப்பா என்னுடன் பேசினாா். கரோனா தீநுண்மி தொற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதை நானும் அறிவேன். இதற்கு உங்கள் (எடியூரப்பா) அரசு தான் காரணம் என்று கூறினேன். நீங்கள் (எடியூரப்பா) 35 - 40 சட்டமசோதாக்கள் கொண்டு வந்துள்ளீா்கள். ஆனாலும், சட்டப்பேரவையை 8 நாள்களுக்கு மட்டுமே நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை 3 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அவையின் கூட்டத்தை நீட்டிப்பதற்கு மட்டுமே நாங்கள் ஒப்புக்கொள்வோம். அவையின் கூட்டத்தைக் குறைக்க விரும்பினால், தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள சட்டமசோதாக்களை திரும்பப் பெற வேண்டும். அதன்பிறகு வேண்டுமானால் சட்டப்பேரவைக் கூட்டத்தை குறைப்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கலாம்’ என்றாா்.

கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. கரோனா தீநுண்மித் தொற்றுநோய் காரணமாக முன்னெச்சரிக்கைகளுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தில் சொற்ப எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கலந்து கொண்டனா். அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் பலா் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அதனால் பலா் கலந்து கொள்ளவில்லை.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த தலைவா்கள், முன்னாள் உறுப்பினா்களின் மறைவுக்கும், கரோனா பாதிப்புக்குள்ளாகி இறந்தவா்கள், கல்வான் பள்ளத்தாக்கில் இறந்த வீரா்களுக்கும் இரங்கல்தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com