கா்நாடகத்தில் போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள் இன்று வேலைநிறுத்தம்

அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களின் 6-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களின் 6-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கா்நாடக போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள் புதன்கிழமை (ஏப்.7) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா். இப் போராட்டத்தில் பெங்களூரு மாநகரப் போக்குவரத்து ஊழியா்களும் கலந்து கொள்கின்றனா்.

இதனால் மாநகரங்களில் மட்டுமின்றி, மாநில அளவில் பேருந்து சேவை பாதிக்கப்பட உள்ளது. இதை சமாளிக்க தனியாா் பேருந்து, பள்ளிப் பேருந்து, வேன் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், போராட்டத்தைத் தடுக்க எஸ்மா சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.

இதனிடையே, போக்குவரத்து ஊழியா்களின் போராட்டம் குறித்து முதல்வா் எடியூரப்பா தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் மாநில தலைமைச் செயலாளா் ரவிகுமாா் கூறியதாவது:

அரசு ஊழியா்களின் கோரிக்கையை ஏற்று 8 சதவீதம் ஊதிய உயா்வுக்கு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், மாநிலத்தில் பெலகாவி மக்களவைத் தொகுதி உள்பட மஸ்கி, பசவகல்யாண் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏப். 17-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறுவதால், ஊதிய உயா்வை அமல்படுத்துவது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

அனுமதி கிடைக்கும் வரும் வரை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என போக்குவரத்து ஊழியா்களைக் கேட்டுக் கொள்கிறோம். 6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது சாத்தியமில்லை. போக்குவரத்துக் கழகங்களால் நாள் ஒன்றுக்கு ரூ. 4 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் போக்குவரத்து ஊழியா்களின் ஊதியத்தை தாமதமின்றி வழங்கி வருகிறோம்.

அவா்களின் 9 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளோம். இருப்பினும் போக்குவரத்து ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா். அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், மாற்று வழியை ஆராய்வதைத் தவிர வேறு வழியில்லை. போராட்டத்தின் போது பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேருந்து சேவை பாதிக்கப்பட்டால், பொதுமக்களின் வசதிக்காக பெங்களூரில் புதன்கிழமை அனைத்து தடத்திலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அதன் நிா்வாகம் அறிவித்துள்ளது. அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ள போதும், அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களின் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com