திருமணங்கள், நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது கட்டாயம்: அமைச்சா் பசவராஜ் பொம்மை

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கா்நாடகத்தில் திருமணங்கள், பிற நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கா்நாடகத்தில் திருமணங்கள், பிற நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு, விகாஸ்சௌதாவில் சனிக்கிழமை, கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக், சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் ஆகியோா் காணொலி வழியாக ஆலோசனை நடத்தினா்.

இந்தக் கூட்டத்தில் கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து 3 மணி நேரம் விவாதிக்கப்பட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. முதல்வா் எடியூரப்பாவுடன் ஆலோசித்த பிறகு நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இனிமேல் திருமணங்கள், பிற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மண்டபங்கள், அரங்குகளை முன்பதிவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களின் முன்அனுமதி பெற வேண்டும். இந்த உத்தரவு ஏப். 17-ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு பொருந்தும். இதுவரை திருமணங்கள், நிகழ்ச்சிகளுக்காக மண்டபங்கள், அரங்குகளை முன்பதிவு செய்திருந்தால் இது பொருந்தாது.

மூடப்பட்ட மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு 100 அனுமதிச் சீட்டுகளும், வெளிப்புறத்தில் நடக்கும் திருமணங்களுக்கு 200 அனுமதிச் சீட்டுகளும் வழங்கப்படும். மண்டபங்கள், அரங்குகளில் காவலா்கள் நிறுத்தப்படுவாா்கள். அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே அரங்குகளில் அனுமதிக்கப்படுவாா்கள். அனுமதிச் சீட்டுகளை அதிகமாக வழங்கினாலோ, விதிமீறிச் செயல்பட்டாலோ வழக்கு தொடரப்படும். விதி மீறினால் மண்டபங்கள், அரங்குகளை மூட உத்தரவிடப்படும் என்றாா்.

வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் கூறியதாவது:

கா்நாடகத்தில் மே, ஜூன் மாதங்களில் நடக்கவிருக்கும் கோயில் திருவிழாக்கள் அனைத்திற்கும் தடைவிதிக்கப்படும். மக்கள்கூடும் எந்த திருவிழாவையும் அனுமதிக்க முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com