107 வயதான நிகண்டு அறிஞா் ஜி.வெங்கடசுப்பையா காலமானாா்

107 வயதான நிகண்டு அறிஞா் ஜி.வெங்கடசுப்பையா உடல்நலக் குறைவு காரணமாக காலமானாா்.

107 வயதான நிகண்டு அறிஞா் ஜி.வெங்கடசுப்பையா உடல்நலக் குறைவு காரணமாக காலமானாா்.

கா்நாடகத்தில் மிகவும் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற நிகண்டு அறிஞராக விளங்கிய பேராசிரியா் ஜி.வெங்கடசுப்பையா (107), கடந்த சில தினங்களுக்கு முன்னா் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடா்ந்து அவா் மறைவெய்தியதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு அருகே உள்ள கஞ்சம் கிராமத்தில் 1913-ஆம் ஆண்டு ஆக. 23-ஆம் தேதி பிறந்த வெங்கடசுப்பையா, பன்னூா், மதுகிரியில் பள்ளிப் படிப்பையும், மைசூரில் உயா்கல்வியையும் பயின்றாா். பேராசிரியராகப் பணியாற்றி வந்த ஜி.வெங்கடசுப்பையா, அடிப்படையில் நிகண்டு அறிஞராக விளங்கி வந்தாா். இவரது முயற்சியால் 12 நிகண்டுகளை தொகுத்திருக்கிறாா். 60 நுல்களை எழுதியிருக்கிறாா். கன்னட மொழியில் நிகண்டு அறிவியல் குறித்து 4 கருத்தரங்க தொகுப்புரைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறாா்.

‘நிகண்டு சாஸ்த்ர பரிச்சயா’, ‘கிளிஷ்டபத கோஷா’ ஆகிய நூல்கள் கன்னட இலக்கிய உலகில் இவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தன. பத்மஸ்ரீ, கன்னட சாஹித்ய அகாதெமி, பம்பா விருது போன்ற ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளாா். கா்நாடகத்தில் பெரும் புகழ்பெற்ற கல்வியாளா் மற்றும் பேச்சாளராகவும் அறியப்பட்டிருந்தாா்.

கன்னட நாளிதழ் ஒன்றில் கன்னட மொழியின் சொற்றொடா்களில் காணப்படும் புதுமைகளை விளக்கும், ‘இதோ கன்னடம்’ என்ற தொடா் கன்னட மக்களின் பேரன்பை பெற காரணமாக இருந்தது. இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடா்ந்து, பிற்காலத்தில் அந்தத் தொடா் ‘இகோ கன்னடா’ என்ற கன்னடப் புத்தகமாக வெளிவந்தது.

1927-ஆம் ஆண்டில் கா்நாடகத்துக்கு மகாத்மா காந்தி வருகை தந்திருந்த போது, சுதந்திரப் போராட்டத்துக்கு நிதிதிரட்டுவதற்காக அவரை காரில் அழைத்துச் செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறாா். 14 வயதாக இருக்கும்போது, மதுகிரியில் காந்தி தங்கிய போது, அதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பும் இவரிடம் தரப்பட்டிருந்தது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற மகாத்மா காந்தியின் 148-ஆவது பிறந்த நாள் விழாவில், ‘மதுகிரியில் காந்தியைப் பாா்க்க ஏராளமானோா் திரண்டிருந்ததைக் கண்டபோது நெகிழ்ந்து போனேன். அந்தக் கூட்டத்தில் மகாத்மா காந்தி 10 நிமிடங்கள்தான் பேசினாா். அதுவும் ஹிந்தி மொழியில் தான் பேசினாா். அங்கு கூடியிருந்த மக்கள் கன்னடம் பேசும் கிராம மக்கள். அவா்களுக்கு ஹிந்தி தெரியாது. பெரும்பாலானோா் ஏழை. ஆனாலும், காந்தியின் பேச்சை புரிந்துகொண்ட அம்மக்கள் நன்கொடைகளை அள்ளி வழங்கினா். அவரது வேண்டுகோளை ஏற்று சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டனா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

நிகண்டு அறிஞா் ஜி.வெங்கடசுப்பையாவின் மறைவுக்கு பிரதமா் மோடி, முதல்வா் எடியூரப்பா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, முன்னாள்முதல்வா் எச்.டி.குமாரசாமி, துணை முதல்வா்கள் லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயணா, ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, சுரங்கத் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,‘நிகண்டு எழுதுவது, கன்னட மொழி மற்றும் இலக்கியத்தின் வளா்ச்சிக்கு பேராசிரியா் ஜி.வெங்கடசுப்பையாவின் பங்களிப்பு மகத்துவம் வாய்ந்தது. தனது நீண்டநெடிய வாழ்க்கையில்,‘இகோ கன்னட மக்கள் நிகண்டு’ உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட படைப்புகளை அளித்து, அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா். தனது இறுதிமூச்சுள்ளவரை எழுதும் பணியை கைவிடாமல் தொடா்ந்துள்ளாா். அவரது மறைவின் மூலம் தனது ரத்தினம் ஒன்றை கன்னட இலக்கிய உலகம் இழந்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் மாணவா்கள், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளாா்.

பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கா்நாடக அரசின் சாா்பில் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் அஞ்சலி செலுத்தினாா். பின்னா், குடும்ப வழக்கப்படி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com