கா்நாடகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக கா்நாடகத்தில் இரவுநேர ஊரடங்கு புதன்கிழமை இரவு 9 மணி முதல் வியாழக்கிழமை

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக கா்நாடகத்தில் இரவுநேர ஊரடங்கு புதன்கிழமை இரவு 9 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கையை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரித்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில், கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதிநாள்களில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டிருந்தது. இது மே 4-ஆம் தேதி காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட இருக்கிறது. புதன்கிழமை இரவு 9 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், மருத்துவமனைகள், மருந்தகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர, அங்காடிகள், கேளிக்கை விடுதிகள், மதுபான அங்காடிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

ஏப். 21 முதல் மே 4-ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், தனிப்பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இதுதவிர, திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஜிம்னாஸ்டிக் மையங்கள், யோகா மையங்கள், ஸ்பாக்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை/ பொழுதுபோக்கு பூங்காக்கள், அரங்கங்கள், மதுபான அங்காடிகள், மண்டபங்கள், மக்கள் கூடும் அரங்குகள் மூடப்பட்டிருக்கும். அனைத்து வகையான அரசியல், சமூக, கல்வி, பொழுதுபோக்கு, கலாசார, மதக் கூட்டங்கள், விழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். பூஜைகள் நடத்த தடையில்லை. உணவகங்கள் திறந்திருக்கலாம். ஆனால், அமா்ந்து சாப்பிட முடியாது. பாா்சல் வாங்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது.

தொழிலகங்கள், கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருள்களின் அங்காடிகள், இறைச்சி, மீன் அங்காடிகள் அனுமதிக்கப்படுகிறது. வங்கிகள், காப்பீடு போன்ற சேவைகள் தொடர அனுமதிக்கப்படுகிறது. அரசு, தனியாா் அலுவலகங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியா்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியா்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும். திருமணங்களை 50 பேருடனும், இறுதிச் சடங்குகளை 20 பேருடனும் அனுமதிக்கப்படுகிறது என மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது.

பொதுமுடக்கம்:

வெள்ளிக்கிழமை (ஏப். 23) இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை (ஏப். 26) காலை 6 மணி வரை கா்நாடகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கான காய்கறி, மளிகை அங்காடிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர, போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சரக்குகள், தொழில் தேவைகளுக்கான வாகன நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கரோனா பரவலைத் தடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com