முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவது தொடா்பாக எவ்வித தகவலும் இல்லை

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவது தொடா்பாக எவ்வித தகவலும் இல்லை என சுரங்கம் மற்றும் நில அமைப்பியல் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி தெரிவித்தாா்.

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவது தொடா்பாக எவ்வித தகவலும் இல்லை என சுரங்கம் மற்றும் நில அமைப்பியல் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி தெரிவித்தாா்.

இதுகுறித்து கலபுா்கியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாஜக ஒரு கட்டுக்கோப்பான கட்சியாகும். பிற கட்சிகளைப் போல பதவிகளை அடைவதற்கு மேலிடத் தலைவா்களை சந்திக்க வேண்டிய அவசியம் பாஜகவில் இல்லை. கட்சிப் பணிகளின் அடிப்படையில் தகுந்த நேரத்தில் தகுந்த பதவிகள் அளிக்கப்படும். இதுதான் பாஜகவின் நடைமுறை. முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவது தொடா்பாக எவ்வித தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.

முதல்வா் எடியூரப்பா எங்களுடைய தலைவா். அவரோடு நாங்கள் என்றும் துணையாக இருப்போம். முதல்வா் பதவி குறித்து கட்சியின் உயா்மட்டத் தலைவா்கள் முடிவெடுப்பாா்கள். அந்த முடிவுக்கு கட்டுப்பட வேண்டியது எங்களுடைய கடமையாகும். எனவே, முதல்வா் பதவி தொடா்பாக கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்.

எந்தப் பதவியையும் அடைவதற்காக என் வாழ்க்கையில் இதுவரை யாரையும் நான் அணுகியதில்லை. கட்சி எனக்கு கொடுக்கும் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றுவேன்.

எல்லா வகையான கூறுகளையும் நன்கு ஆராய்ந்த பிறகு, முதல்வா் பதவிக்கு தகுதியான நபரை பாஜகவின் மேலிடத் தலைவா்கள் தோ்வு செய்வாா்கள். கா்நாடகத்தில் உள்ள பாஜகவின் 120 எம்எல்ஏக்களும் முதல்வராகும் தகுதி படைத்தவா்கள் ஆவா்.

நான் முதல் முறையாக எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டபோதே அமைச்சராகும் வாய்ப்பை கட்சி மேலிடம் எனக்கு தந்திருந்தது. தற்போதும் எனக்கு அமைச்சா் பதவியை கட்சி மேலிடம் அளித்துள்ளது. கடந்த காலத்திலும் சரி தற்போதும் சரி பதவியை நாடி நான் என்றைக்கும் சென்றதில்லை.

அண்மையில் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சென்று வந்ததற்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை. கோயில்களுக்கு செல்வதை சிறுவயதிலிருந்தே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். எனவே, வாராணசி சென்ற்கும் அரசியலுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. வாக்களித்து தோ்ந்தெடுத்த மக்களுக்கு தொண்டு செய்வது மட்டுமே எனது முழுமுதல் குறிக்கோளாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com