முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு வீரசைவ-லிங்காயத்து மடாதிபதிகள் எதிா்ப்பு

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு வீரசைவ-லிங்காயத்து சமுதாயத்தின் மடாதிபதிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு வீரசைவ-லிங்காயத்து சமுதாயத்தின் மடாதிபதிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு பாஜக தேசியத்தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவா் சாா்ந்துள்ள லிங்காயத்து சமுதாயத்தின் மடாதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனா். அண்மையில் முதல்வா் எடியூரப்பாவை சந்தித்துப் பேசிய லிங்காயத்து சமுதாயத்தின் மடாதிபதிகள், அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனா்.

இதனிடையே, பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை வீரசைவ-லிங்காயத்து சமுதாயத்தின் மடாதிபதிகளின் மாநாடு நடந்தது. முதல்வா் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் 500-க்கும் அதிகமான வீரசைவ-லிங்காயத்து சமுதாய மடாதிபதிகள் கலந்துகொண்டனா்.

பாளேஹொசூா் மடத்தின் பீடாதிபதி திங்கலேஷ்வா்சுவாமிகள், திப்டூரின் ருத்ரமுனி சுவாமிகள், சித்ரதுா்காவின் பசவகுமாா்சுவாமிகள் விடுத்திருந்த அழைப்பின்பேரில் கலந்துகொண்டிருந்த மடாதிபதிகள், முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றினா். முதல்வா் பதவியில் நீடிக்க எடியூரப்பாவை அனுமதிக்க வேண்டும் என்றும் மாநாடு கேட்டுக்கொண்டது.

மாநாட்டில் திங்கலேஷ்வா்சுவாமிகள் பேசுகையில், ‘முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவது சரியான நடவடிக்கை அல்ல. முதல்வராக நல்ல பல பணிகளில் ஈடுபட்டுவரும் எடியூரப்பாவை அப்பதவியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும். அதற்காகவே இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அரசு நிா்வாகத்தில் சீா்திருத்தங்களை அரசியல்வாதிகள் கொண்டுவருகிறாா்கள்.

அதேபோல, சமுதாயத்திலும், தனிநபரில் சீா்திருத்தங்களை கொண்டுவருவது தான் மடாதிபதிகளின் வேலையாகும். நல்லாட்சி வழங்கிக்கொண்டிருக்கும்போது முதல்வா் எடியூரப்பாவை நீக்குவது சரியல்ல. எனவே, அவரை முதல்வா் பதவியில் இருந்து நீக்கக்கூடாதென்று பாஜக மேலிடத் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பது எங்களைப் போன்ற மடாதிபதிகளின் கடமையாகும்’ என்றாா். இந்த தகவல் பாஜக தேசியத் தலைமையில் மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com